உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அரசு சிமென்ட் விற்று சொந்த வீடு கட்டிய அதிகாரி!

அரசு சிமென்ட் விற்று சொந்த வீடு கட்டிய அதிகாரி!

''போ ராட்டத்துக்கு பரிசு, பணியிட மாற்றம் பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய். ''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''கடந்த, 2019ம் வருஷம் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தியப்ப, எதிர்க்கட்சி தலைவரா இருந்த ஸ்டாலின், அவங்களை பார்த்து, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உங்க கோரிக்கை களை நிறைவேற்றுவேன்'னு வாக்குறுதி தந்தாரு... ஆனா, தி.மு.க., ஆட்சிக்கு வந்து நாலரை வருஷம் முடிஞ்சும், டாக்டர்கள் கோரிக்கையை கண்டுக்கவே இல்ல பா... ''கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்டர் சங்க நிர்வாகிகள் சமீபத்தில் சேலத்துல இருந்து சென்னை வரைக்கும் பாதயாத்திரை நடத்தினாங்க... இதுக்கு ஏற்பாடு செய்த அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளையை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து, நாகை அரசு மருத்துவ கல்லுாரிக்கு துாக்கி அடிச்சுட்டாங்க பா... ''உரிமைகளை கேட்டு போராடியதற்கு பரிசு, பணியிட மாற்றமான்னு அரசு டாக்டர்கள் எல்லாம் கொதிச்சு போயிருக்காங்க... இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி, நுாதன போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். உடனே, ''நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய மையங்கள்ல முறையா ன கண்காணிப்பே இல்ல ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு தாவிய குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''அதுவும் இல்லாம, குழந்தைகள் பாதுகாப்புக்காக நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முறைப்படி நடத்தறது இல்ல... ஆனா, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதா செலவு கணக்கு மட்டும் எழுதிண்டு இருக்கா ஓய்... ''இங்க புதுசா வந்திருக்கற அதிகாரியின் காதுல, இதை சிலர் போட்டு வச்சிருக்கா... இப்ப, இது சம்பந்தமா ஒரு பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்த முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ''தீபா மேடம்... கொஞ்ச நேரம் கழிச்சு நானே பேசுதேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''அரசு சிமென்டை வித்து, சொந்த வீடே கட்டிட்டாருல்லா...'' என்றார். ''யாருங்க அந்த கில்லாடி.. .'' என கேட்டார், அந்தோணிசாமி. ''ஜெ., ஆட்சியில், 'அம்மா சிமென்ட்' என்ற திட்டத்தை கொண்டு வந்தாங்கல்லா... ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் சிமென்ட் விற்பனை செஞ்சாவ வே... ''இப்ப, அம்மா பெயரை மட்டும் எடுத்துட்டு, ஒன்றிய அலுவலகங்கள்ல மலிவு விலை சிமென்ட் விற்பனை நடக்கு... திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கிற பிரபல சிவன் கோவில் ஊரின் ஒன்றியத்துல, ஒரு அதிகாரி இந்த சிமென்ட் விற்பனைக்கு பொறுப்பா இருக்காரு வே... ''கடந்த ஒரு வருஷமா, சிமென்ட் மூட்டைக்கு பணம் கட்டிய பலருக்கும் சிமென்ட் விற்பனை செஞ்சதா கணக்கு காட்டி, அந்த சிமென்ட் மூட்டைகளை வெளி மார்க்கெட்டுல விற்பனை பண்ணிட்டாரு... 'இப்படி கிடைச்ச பணத்துல அந்த அதிகாரி, சொந்தமா வீடே கட்டிட்டார்'னு ஒன்றியத்துல இருக்கிற ஊழியர்களே புலம்புதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி. ''சரவணன் வரார்... பில்டர் காபி போடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 26, 2025 16:44

மருத்துவர்களைப்பற்றி ஒரு பழமொழி உண்டு 'நோயிலிருந்து காப்பாற்றும்போது கடவுள், பிறகு வேறொன்று' என்று கொரானா இல் உயிருக்கு பயந்து நடுங்கியபோது, தங்கள் உயிர், சுகாதாரம் எண்ணாது உயிர் காத்தவர்களுக்கும் அதே பழமொழியை செய்து காட்டுகிறது அரசு இப்படி ஒவ்வொரு துறையினருக்கும் வாக்குறுதி கொடுத்து வாக்குகள் வாங்கியவர்கள், அடுத்து, அந்த மீறல்களாலேயே பதவி இழக்கும் நிலை வந்துள்ளது


S.V.Srinivasan
ஆக 26, 2025 08:21

மருத்துவர்கள் வாழ்க்கையும், தொழிலும் நல்லபடியா இருக்கணும்னா வர 2026 தேர்தல்ல இந்த பாழாப்போன திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பனும். செய்வார்களா ?


முக்கிய வீடியோ