சென்னை ஓபன் சதுரங்கம்: தமிழக வீரர் சாம்பியன்
சென்னை தமிழ்நாடு சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் இணைந்து, மகாலிங்கம் கோப்பைக்கான 15வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி --- 2024, எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில், கடந்த 2ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.போட்டியில், 'ஏ' பிரிவில் 2,000 ரேட்டிங் மேல், 'பி' பிரிவில் அதற்கு குறைவானோர்; 'சி' பிரிவில், 1,800 ரேட்டிங் குறைவானோர் உள்ளிட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 17 கிராண்ட் மாஸ்டர்கள், 27 வீரர்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டி 10 சுற்றுகளாக சுவிஸ் அடிப்படையில் நடந்தன.அனைத்து சுற்றுகள் முடிவில், பிரதான போட்டியான, 'ஏ' பிரிவில், தமிழக வீரர் இனியன் 8.5 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து, 8 புள்ளிகளில் மற்றொரு தமிழக வீரர் வெங்கடேஷ் இரண்டாமிடத்தை வென்றார்.தொடர்ந்து, ரயில்வே வீரர் ஆரோனயக் கோஷ், ஐ.சி.எப்., வீரர் தீபன் சக்கரவர்த்தி, மஹாராஷ்டிரா வீரர் சமத் ஜெயகுமார், மேற்கு வங்க வீரர் கவுஸ்துவ் குண்டு ஆகியோர், தலா 7.5 புள்ளிகள் பெற்று, முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.