உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டில்லி கேன்டீனை கைப்பற்றிய சர்ச்சை சமையல் கலைஞர்!

டில்லி கேன்டீனை கைப்பற்றிய சர்ச்சை சமையல் கலைஞர்!

''தீ பாவளி பரிசு வரலன்னு பொங்கிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி. ''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில், ஓட்டுச்சாவடி தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம், சமீபத்துல மாவட்டச் செயலரும், மாதவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சுதர்சனம் தலைமையில் நடந்துச்சு... இதுல கலந்துக்கிட்ட கட்சியினர், ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினாங்க... ''அதாவது, 'செங்குன்றத்துக்கு ரெண்டரை வருஷமா நகர செயலரே நியமிக்கல... தேர்தல் வர்றதால, புதிய செயலர் மற்றும் வார்டு நிர்வாகிகளை நியமிக்கணும்... அதுவும் இல்லாம, கட்சி தலைமை வழங்கிய தீபாவளி பரிசு தொகை, எங்க கைக்கு இன்னும் வந்து சேரல... கட்சி நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் எதையும் எங்களுக்கு தெரிவிக்கிறது இல்ல'ன்னு புகார்களை அடுக்குனாங்க பா... ''எல்லாத்தையும் பொறுமையா கேட்ட சுதர்சனம், 'எல்லா பிரச்னைகளும், விரைவில் தீர்க்கப்படும்... தேர்தல் பணிகள்ல எல்லாரும் தீவிரமா ஈடுபடுங்க'ன்னு சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''பட்டாசு கடைகளுக்கு அனுமதி தந்ததுல, 'டபுள்' வருமானம் பார்த்துட்டாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''-நீலகிரி மாவட்டத்தில், தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க, 'ஆன்லைன்' வழியா விண்ணப்பிக்க சொன்னாவ... சம்பந்தப்பட்ட இடங்கள்ல வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத் துறையினர் நேரடியா ஆய்வு நடத்தி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு அறிக்கை அனுப்புவாவ வே... ''கடைசியா அவரும் ஆய்வு பண்ணி, அனுமதி தருவாரு... இதுல, எல்லா மட்டத்துலயும் அதிகாரிகளுக்கு, 'கட்டிங்' வெட்டணும்... இந்த வருஷமும் இப்படி நிறைய பேர் விண்ணப்பிச்சு, பட்டாசு கடைகள் வச்சிருக்காவ வே... ''இதுபோக, எந்த விண்ணப்பமும் வழங்காம கூடலுார், பந்தலுார் உட்பட சில இடங்களில், பட்டாசு கடைகள் வைக்க, சில அதிகாரிகள், 'கட்டிங்' வாங்கிட்டு அனுமதி குடுத்து, 'டபுள்' வருமானம் பார்த்துட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''டில்லி கேன்டீனை கைப்பற்றிட்டாரு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''தமிழக அரசுக்கு சொந்தமா, டில்லியில், 'தமிழ்நாடு இல்லம்' இருக்கே... இங்க கேன்டீன் நடத்தும் டெண்டரை எடுக்க, எப்பவுமே கடும் போட்டி நடக்கும் பா... ''இந்த முறை கேன்டீன் டெண்டரை, தமிழகத்தை சேர்ந்த பிரபல சமையல் கலைஞருக்கு குடுத்திருக்காங்க... இவர், சில வருஷங்களா முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு விருந்து பரிமாறி புகழ் பெற்றவர்... சமீபத்துல கூட, பிரபல ஆடை வடிவமைப்பாளரை இரண்டாவது திருமணம் பண்ணி சர்ச்சையில சிக்கினாரு பா... ''இப்ப, டில்லி கேன்டீன் டெண்டரை எடுத்துட்டாரு... அதே நேரம், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் சிலர், அவர் வாங்கி கொடுத்த விலை உயர்ந்த புதிய மொபைல் போன்களோட வலம் வர்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய். ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''சொல்லும் ரங்கராஜ்... மாதம்பட்டி போயிட்டு எப்ப வந்தீர்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 19, 2025 18:35

Contract எடுக்க பேசியது ‘விலையுயர்ந்த’ போன்கள் தலைமை கொடுத்த பாரிஸில் எவ்வளவு ‘ஒதுக்கிக்கொள்ளலாம்’ என்ற சர்ச்சை முடிந்திருக்காது அதன்பின் ‘சென்றது போக நின்றது’ பங்கு வைக்கப்படும்


KOVAIKARAN
அக் 19, 2025 11:49

மாதம்பட்டி ரங்கராஜ் காட்டில் நிறைய மழை பெய்கிறது போலும். நல்ல விளைச்சலையும் அறுவடையையும் எதிர்பார்க்கலாம். விளைச்சலில் தமிழக MP க்களுக்கும் பங்கு உண்டா?