உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஈகோ மோதலில் பந்தாடப்பட்ட மாநகராட்சி அதிகாரி!

ஈகோ மோதலில் பந்தாடப்பட்ட மாநகராட்சி அதிகாரி!

மெ து வடையை கடித்தபடியே, ''சத்தமே இல்லாம மையக்குழுவை மாத்தி அமைச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எந்த அமைப்புல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''தமிழக பா.ஜ., மையக்குழுவில், இதுவரை முன்னாள் தலைவர்கள், மாநில அமைப்பாளர்கள், தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொதுச்செயலர்கள்னு பலர் இருப்பா... இதனால, இந்த கூட்டத்துல ரகசியமா விவாதிக்கற விஷயங்கள், பத்திரிகையாளர்கள் காதுக்கு போயிடறதுன்னு சர்ச்சை எழுந்தது ஓய்... ''இதனால, கட்சி நிர்வாகத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படறதா சொல்லி, பொதுச்செயலர்களை இக்குழுவில் இருந்து சத்தமில்லாம நீக்கிட்டா... முன்னாடி, இந்த குழுவில் இருந்த கருப்பு முருகானந்தம், ஏ.பி.முருகானந்தம், பொன் பாலகணபதி, ராம சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர், சமீபத்துல நடந்த மையக் குழு கூட்டத்துல கலந்துக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''கலெக்டரை ரெண்டு மணி நேரம் காக்க வச்சுட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய். ''யாருங்க அந்த அமைச்சர்...'' என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி. ''திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள பொன்னனியாற்றுக்கு, மாயனுார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தொடர் பா, அமைச்சர் மகேஷ் சமீபத்துல ஆய்வு நடத்தினாரு... சாயந்தரம், 4:00 மணிக்கு வர்றதா அமைச்சர் சொல்லியிருந்ததால, கலெக்டர் சரவணன், வருவாய், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், 3:30 மணிக்கெல்லாம் அணைக்கு வந்துட்டாங்க பா... ''ஆனா, அமைச்சர் சொன்ன நேரத்துக்கு வரல... 'வந்துட்டே இருக்கேன்'னு சொல்லி சொல்லி, கடைசியா இருட்டுற நேரத்துல, 6:௦0 மணிக்கு மேல தான் வந்தாரு... சில நிமிடங்கள்லயே ஆய்வை முடிச்சிட்டு கிளம்பிட்டாரு... 'அமைச்சர் நேரு சிபாரிசில் வந்த கலெக்டர் என்பதால், அவரை வேணும்னே மகேஷ் காக்க வச்சுட்டார்'னு நேருவின் ஆதரவாளர்கள் புகார் வாசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''ஈகோ மோதல்ல அதிகாரியை பந்தாடிட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''கோவை மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரியிடம், சில கட்டட அனுமதி விண்ணப்பங்கள்ல கையெழுத்து போட்டு தரும்படி, ஆளுங்கட்சி பெண் புள்ளி உத்தரவு போட்டிருக்காங்க... அவர், அதை கண்டுக் கலை... ''கடுப்பான பெண் புள்ளி, வடக்கு மண்டல பெண் அதிகாரியிடம் பேசி, அந்த விண்ணப்பங்கள்ல கையெழுத்து போட சொல்லி, அனுமதி தந்துட்டாங்க... அதிர்ச்சியான மத்திய மண்டல அதிகாரி, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் சொல்லிட்டாருங்க... ''கமிஷனரும், 'மண்டலம் விட்டு மண்டலம் எப்படி அனுமதி தரலாம்'னு அதிர்ச்சியாகி, அந்த அனுமதிகளை நிறுத்தி வைக்க சொல்லிட்டாருங்க... உடனே, பெண் புள்ளி, நகராட்சி நிர்வாக துறையின் உயர் அதிகாரிகிட்ட பேசியிருக்காங்க... ''ஏற்கனவே, கமிஷனருக்கும், அந்த உயர் அதிகாரிக்கும் உரசல் உண்டு... இதை பயன்படுத்திக்கிட்ட உயர் அதிகாரி, கமிஷனருக்கு வேண்டிய மத்திய மண்டல அதிகாரியை, ஈரோட்டுக்கு துாக்கி அடிச்சுட்டாருங்க...'' என ஒரே மூச்சில் முடித்தார், அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''ரங்கநாயகி... வீட்டுல குழந்தைகள் சவுக்கியமா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ