கிரைம் கார்னர்
நிதி நிறுவனத்தில் ஈ.டி., சோதனை சென்னை: கொரட்டூர், டி.வி.எஸ்., காலனி, 57வது தெருவில், நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் பெற்று, அன்னிய செலாவணி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், அந்நிறுவன அலுவலகம் உட்பட இரு இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பிரபல ரவுடியின் கூட்டாளி கைது எண்ணுார்: எண்ணுார் போலீசார், நேற்று காலை கத்திவாக்கம் அனல் மின் நிலையம் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பியோடினார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில், 60 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' எனும் போதை பொருள் இருந்தது. விசாரணையில், அவர் எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற ஜெயிலர் கார்த்திக், 25, என்பதும், பிரபல ரவுடியான எண்ணுார் தனசேகரின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பஸ் மோதி பெண் பலி ஓட்டேரி: ஓட்டேரி, கொசப்பேட்டை வி.வி.கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராணி, 58. கணவர் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இவர், நேற்று காலை கொன்னுார் நெடுஞ்சாலையில் காசநோய் மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக கோயம்பேடில் இருந்து மின்ட் நோக்கி சென்ற தடம் எண்: 48பி அரசு பேருந்து மோதி, சம்பவ இடத்திலேயே ராணி பரிதாபமாக உயிரிழந்தார். புளியந்தோப்பு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.