உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு நடக்கும் கட்டிங் வசூல்!

பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு நடக்கும் கட்டிங் வசூல்!

''இடமாறுதல்ல ஏகப்பட்ட கோல்மால் நடந்திருக்கு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக அரசின் நிதித்துறை கட்டுப்பாட்டுல வரும் கூட்டுறவு தணிக்கை துறையில், நிறைய அதிகார துஷ்பிரயோகங்களும், முறைகேடுகளும் தொடர்ச்சியா நடக்கு... ''உதாரணமா, 'மூணு வருஷம் பணி முடிச்சவங்களுக்கு, கடந்த, 16ம் தேதி, பொது கலந்தாய்வு மூலம் இடமாறுதல் நடக்கும்'னு தலைமை தணிக்கை அதிகாரி கையெழுத்துடன் அறிவிப்பு வெளியாச்சு வே...''ஆனா, கூட்டுறவு தணிக்கை துறையின் மற்றொரு அதிகாரி ஒருத்தர் தலையிட்டு, பணிமூப்பு பட்டியலில் கடைசியா வந்த ஐந்து தணிக்கையாளர்களுக்கு, 13 மற்றும், 14ம் தேதின்னு கையொப்பமிட்டு, இடமாறுதல் வழங்கிட்டாரு... 'இது சம்பந்தமா, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தினா, நிறைய முறைகேடுகள் வெளிவரும்'னு பாதிக்கப்பட்ட பலரும், முதல்வருக்கு புகார் அனுப்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''ஓப்பன் மைக்ல தாறுமாறா பேசறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த போலீஸ் அதிகாரியை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''முழுசா கேளும்... கோவை மாநகராட்சியில், நிர்வாக அறிவுறுத்தல்கள் வழங்கறதுக்கு, 'வாக்கி -- டாக்கி' என்ற கருவியை, 'மைக்' போல பயன்படுத்தறா... சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த, மைக்ல கமிஷனர் அறிவுரை குடுத்துண்டே இருப்பார் ஓய்...''மாநகராட்சியின் உதவி கமிஷனர் ஒருத்தர், ஜாலியா பேசறதா நினைச்சுட்டு, சக அதிகாரிகளை மைக்ல தரம் தாழ்ந்து பேசறார்... இதை எல்லாருமே கேக்கறா என்ற லஜ்ஜையே இல்லாம பேசறார் ஓய்...''இது, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு... அவருக்கு எதிரா, தங்களது சங்கம் மூலமா தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்பலாமான்னும் யோசனை பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முத்துசாமி இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாய், ''கடைகளுக்கு வசூல் வேட்டை நடக்குது பா...'' என்றபடியே தொடர்ந்தார்...''ராமநாதபுரம் நகராட்சியில் முக்கிய பதவியில் இருக்கிற, தி.மு.க., பிரமுகர், தொகுதியின் முக்கிய புள்ளி மற்றும் மாவட்ட முக்கிய புள்ளி ஆதரவுடன் மணல் கடத்தல், அரசு நிலம் ஆக்கிரமிப்புன்னு வாரி குவிச்சிட்டு இருக்காரு பா...''புது பஸ் ஸ்டாண்ட்ல சமீபத்துல, 20 கோடி ரூபாய்ல விரிவாக்க பணிகள் முடிஞ்சிருக்கு... சீக்கிரமே ராமநாதபுரம் வர்ற முதல்வர் கையால இதை திறக்க போறாங்க பா...''புது பஸ் ஸ்டாண்ட்ல இருக்கிற, 25 கடைகளையும், முறைப்படி ஏலம் விடாம, தங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஒதுக்க நகராட்சி முக்கிய புள்ளி முடிவு பண்ணியிருக்காரு... இதுக்காக, ஏற்கனவே அங்க கடை வச்சிருந்தவங்க உட்பட பலரிடமும் பல லட்சம் ரூபாய் வரை பேரம் நடக்குது பா...''கட்டிங் தந்தவங்களுக்கே கடைகளை ஒதுக்கி, நகராட்சி கூட்டத்துல தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு பண்ணியிருக்காரு... அப்படி தீர்மானம் நிறைவேத்தினா, கடை கிடைக்காதவங்க கோர்ட்டுக்கு போக தயாராகிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''கார்மேகம் திரண்டுட்டு இருக்கே... மழை வரும் போலிருக்கே ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் அவசர அவசரமாக இடத்தை காலி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 23, 2025 18:30

எல்லாக் கடைகளையும் முன்பாகவே பேசி ‘முடித்துவிட்டு’ முதல்வர் வரும்போது ‘set up ‘ திறப்புவிழா நடத்துவார்கள் நடப்பதே set up அரசுதானே ‘முதல்வர் மனம் கோணாதபடி எழுதிக்கொடுத்த கேள்விகளைக் கேளுங்க ‘ என்று நிருபர்களுக்கு உத்தரவு, குப்பத்துக்கு துணிப்போர்வை என நாடகமே அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை