உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  மாவட்ட, மாநகர தி.மு.க., புள்ளிகளின் மல்லுக்கட்டு!

 மாவட்ட, மாநகர தி.மு.க., புள்ளிகளின் மல்லுக்கட்டு!

பில்டர் காபியை பருகியபடியே, ''ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் மேட்டரை பேச ஆரம்பித்தார் குப்பண்ணா. ''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழக அரசின் நிதித் துறையின் கீழ் தணிக்கை துறை செயல்படறது... இதுல, ரெண்டு வருஷமா உயர் அதிகாரியா இருக்கற ஒருத்தர், ஊழியர்களை, 'டார்ச்சர்' பண்ணிண்டு இருக்கார் ஓய்... ''ஊழியர்களிடம் கடும் கெடுபிடி காட்டறவர், அவாளை ஒருமையில பேசி அவமானப்படுத்தறார்... வேலை சம்பந்தமான தகவல்களை, நடுராத்திரி, 1:00 மணிக்கு, 'வாட்ஸாப்'ல அனுப்பிட்டு, 'கார்த்தால, 9:00 மணிக்குள்ள முடிக்கணும்'னு மிரட்டறார் ஓய்... ''இந்த மாதிரி, நேரம் கெட்ட நேரத்துல அனுப்பற மெசேஜ்களால, பெண் ஊழியர்கள் கடும் மன உளைச்சல்ல இருக்கா... இவரை பத்தி, ஏற்கனவே நிதி அமைச்சருக்கு நிறைய புகார்கள் போயிருக்கு ஓய்... ''ஆனாலும், நிதித் துறையின் உயர் அதிகாரி தயவுல, இவரது வண்டி ஓடறது... முதல்வர் தலையிட்டு இதுக்கு முடிவு கட்டலைன்னா, இத்துறையில இருக்கற, 2,000 ஊழியர்களும், அவாளது குடும்பத்தினரும், தேர்தல்ல ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட முடிவு பண்ணியிருக்காளாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ''அருண்சுந்தர் தயாளனா... அப்படி யாரும் இங்க இல்லே...'' எனக் கூறி போனை கீழே வைத்தபடியே, ''பி.டி.ஓ.,வை மாத்த துடிக்காவ வே...'' என்றார். ''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்துல இருக்கிற சில ஊராட்சிகள்ல, கடந்த காலங்கள்ல நடந்த ஊழல், முறைகேடுகளை பி.டி.ஓ.,வான கனகராஜ் கண்டுபிடிச்சாரு... குறிப்பா, ஆளுங்கட்சியினர் தலைவர் பதவி வகித்த ஊராட்சிகள்ல நிறைய முறைகேடுகளை கண்டுபிடிச்சி, விசாரணை நடத்திட்டு இருக்காரு... ''இதனால, அவர் மீது கடுப்புல இருக்கிற ஆளுங்கட்சியினர், அவரை அங்கிருந்து மாத்த, ஊரக வளர்ச்சித் துறையின் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் குடுத்துட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி. ''தி.மு.க.,வுல, 'மாவட்டமும், மாநகரமும்' மல்லுக்கட்டுறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்... ''திருச்சிக்கு பக்கத்துல இருக்கிற மாவட்டத்துல, தி.மு.க.,வின் ரெண்டு முக்கிய புள்ளிகளுக்கு இடையில அடிக்கடி முட்டல், மோதல் நடக்குது... இதுல, ஒருத்தர் மாவட்ட பதவியிலும், இன்னொருத்தர் மாநகர பதவியிலும் இருக்காங்க பா... ''இதுல, மாநகர புள்ளி, தன் ஏரியாவுல இருக்கிற பல துறைகளின் அரசு அதிகாரிகளிடமும், 'நீங்க வாங்குற, 'கட்டிங்'ல எனக்கும் பங்கு தரணும்'னு கறாரா கேட்டிருக்காரு... இதை கேள்விப்பட்ட மாவட்ட புள்ளி, 'தேர்தல் நேரத்துல கட்சி பெயரை கெடுக்காதீங்க'ன்னு அறிவுரை குடுத்திருக்காரு பா... ''இதுல, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆயிடுச்சு... ஒரு கட்டத்துல மாநகரம், மாவட்ட புள்ளி முன்னாடி இருந்த மேஜையை ஓங்கி அடிச்சிட்டு வெளியில போயிட்டாரு... இதனால, மாவட்டம் அதிர்ச்சியிலும், அவமானத்திலும் புழுங்கிட்டு இருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய். ''வாங்க செல்லபாண்டியன்... புதுக்கோட்டை போயிருந்தீரே... ராஜேஷ் சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 28, 2026 16:08

மாநகர புள்ளி மாவட்ட புள்ளி மேசைமீது என்ன சொல்லி ஓங்கி அடித்தார்..? என் தயவுயில்லாமல் சட்டசபை தேர்தலில் எப்படி ஜெயிக்கிறே பார்ப்போம் என்று சாவல் விட்டுயிருப்பாரோ..?


D.Ambujavalli
ஜன 28, 2026 06:37

'நாலேமுக்கால் வருஷம் வேண்டியமட்டும் வாரிச் சுருட்டியது போதும் தேர்தல் சமயம் கொஞ்சம் நல்ல பிள்ளைகளாக இருப்போம் '. 1. ஆஹா என்ன ஒரு கட்சி ஒற்றுமை


புதிய வீடியோ