பு த்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்ட நண்பர்கள் மத்தியில், ''போட்டதை எடுக்க வசூலை ஆரம்பிச்சுட்டார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில், ஒரு அதிகாரி இருக்கார்... கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பன்னீர்செல்வம் தயவுல இந்த வேலைக்கு வந்தார் ஓய்... ''ஆபீசுக்கே சரியா வர்றதும் கிடையாது... வேலையும் சரியா பார்க்கறது இல்லன்னு இவர் மேல ஏகப்பட்ட புகார்கள்... இவரை பத்தி, நாம ஏற்கனவே, செப்டம்பர் 11ம் தேதி பேசியிருந்தோம் ஓய்... ''உடனே, அதிகாரியை துாத்துக்குடிக்கு துாக்கியடிச்சா... ஆனா, அங்க போகாமலே, துறையின் உயர் அதிகாரிகளை, 'கவனிச்சு' மறுபடியும் திண்டுக்கல்லுக்கே வந்துட்டார் ஓய்... ''இப்ப கொடுத்ததை எடுக்கணும்னு, கொடைக்கானல் மசாஜ் சென்டர்கள், கள்ள லாட்டரி விற்பனையாளர்களிடம், 'உங்களுக்கு எதிரா செய்திகள் வர வச்சிடுவேன்'னு மிரட்டி வசூல் பண்றார்... அதுபோல, ஒவ்வொரு துறை சார்பிலும் நடத்தற நிகழ்ச்சிகளின் செய்திகளை வெளியிடறதுக்காக, அந்தந்த துறை அதிகாரி களிடம், கணிசமான தொகையை கறந்துடறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''இளையேந்திரன், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''ஒரு மரக்கன்றுக்கு, 1,000 ரூபாய் செலவு கணக்கு காட்டுறாங்க...'' என்ற படியே தொடர்ந்தார்... ''புதுசா சாலையை விரிவாக்கம் செய்யிறப்ப, நெடுஞ்சாலை துறையினர் சார்பில், சாலை ஓரங்கள்ல புதுசா மரக்கன்றுகள் நட்டு, சுத்தி வேலியும் அமைக்கிறாங்க... ஒரு மரக்கன்று நடுறதுக்கு, 1,000 ரூபாய் வரைக்கும் செலவு பண்றதா சொல்றாங்க... ''ஆனா, 'பல இடங்கள்ல குழியின் ஆழம் குறைவா இருக்கு... ஏனோ தானோன்னு நடுறதால, 60 சதவீதம் மரக்கன்றுகள் தான் வளரும்... மத்தது எல்லாம் பட்டு போயிடும்'னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்றாங்க... ''அது தவிர, 'இந்த மாதிரி மரக்கன்று நடும் பணிகளை, சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம்'னும் அவங்க ஆலோசனை சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் கோபத்தை கேளுங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''திருவள்ளூர் மாவட்டம், புதுமாவிலங்கை ஊராட்சியில், நாலு நாளைக்கு முன்னாடி, அரசின் நேரடி கொள்முதல் நிலைய துவக்க விழா நடந்துச்சு... இதுல, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கிட்டாங்க பா... ''திருவள்ளூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வர லேட்டானதால, விழாவை துவக்கி நடத்தினாங்க... பாதியில வந்த எம்.எல்.ஏ., பெயரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி சீனிவாசன் சொல்ல மறந்துட்டாரு பா... ''இதனால கடுப்பான ராஜேந்திரன், பாதியிலயே எழுந்து கிளம்பிட்டார்... அவர் பின்னாடியே போய் கலெக்டர் சமாதானப்படுத்த, 'நான் என்ன செத்தா போயிட்டேன்... நான் வர்ற வரைக்கும் உங்களால காத்திருக்க முடியாதா'ன்னு கோபமா சொல்லிட்டு, விருட்டுன்னு கிளம்பிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய். அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.