உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போதை டிரைவருக்கு தி.மு.க., தொழிற்சங்கம் வக்காலத்து!

போதை டிரைவருக்கு தி.மு.க., தொழிற்சங்கம் வக்காலத்து!

மெதுவடையை கடித்தபடியே, “சாமி வரம் குடுத்தும், பூசாரி குடுக்காத கதையா இருக்கு ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.“எதுக்கு பா...” என கேட்டார், அன்வர்பாய்.“திருப்பூர் பக்கத்துல இருக்கற முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலுக்கு திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு முடிவு எடுத்துது... கோவில் கருவறை விமானத்துக்கு, 1.50 கோடி ரூபாய்ல தங்க தகடுகள் பதிக்கவும் முடிவு பண்ணா ஓய்...“இதுக்கான முழு செலவையும், அறங்காவலர் ஒருத்தர் ஏத்துக்கறதா சொல்லி, அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருக்கா... ஆனா, அதுக்கு எந்த பதிலும் தராம, ஜூன் முதல் வாரத்துல கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் தேதி குறிச்சுட்டா ஓய்...“இதனால, 'தங்க தகடுகள் அமைச்ச பிறகு கும்பாபிஷேகம் நடத்தினா தானே சரியா இருக்கும்... முதல்ல தங்க தகடுகள் பதிக்க அனுமதி தந்துட்டு, மூணு மாசம் கழிச்சு கும்பாபிஷேகம் பண்ணிக்கலாம்'னு பக்தர்கள் எல்லாம் சொல்றா ஓய்...” என்றார், குப்பண்ணா. “முதல்வரை பார்க்க முடிவு பண்ணியிருக்காங்க பா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...“கொரோனா நேரத்துல பணியாற்றி உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தனின் குடும்பம், அரசு வேலை கேட்டு நாலு வருஷமா அலையுதுல்லா... அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவரா இருந்து, மறைந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனின் கல்லறை, சேலம் மாவட்டம், மேட்டூர்ல இருக்கு வே...“விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க கோரி, வர்ற ஜூன் 11ம் தேதி, இந்த கல்லறையில இருந்து அரசு டாக்டர்கள் குழு பாதயாத்திரையா புறப்பட்டு, சென்னையில் கருணாநிதி நினைவிடத்துல முடிக்க இருக்காவ வே...“ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முதல்வர் வர்றதால, அவரையும் சந்திச்சு கோரிக்கையை வலியுறுத்த முடிவு பண்ணியிருக்காவ... ஆனா, டாக்டர்கள் தரப்பை முதல்வர் சந்திப்பாரான்னு தெரியல... இதுக்கு இடையில, டாக்டர்கள் பாதயாத்திரைக்கு போலீசார் இன்னும் அனுமதி தரல வே...” என்றார், அண்ணாச்சி. “தப்பு செஞ்சவருக்கு வக்காலத்து வாங்கியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.“கடந்த 10 நாளுக்கு முன்னாடி, பொள்ளாச்சியில் இருந்து சிவகாசிக்கு போகும் அரசு பஸ்சை, விருதுநகரை சேர்ந்த டிரைவர் ஓட்டினாருங்க... அந்தியூர் டோல்கேட் பக்கத்துல போனப்ப தான், டிரைவர் போதையில இருக்கிறது பயணியருக்கு தெரிஞ்சதுங்க...“உடனே, பஸ்சை நிறுத்தி போலீசுக்கு தகவல் குடுத்துட்டாங்க... போலீசாரும் வந்து, டிரைவரை இறக்கி விட்டுட்டு, வேற டிரைவரை வச்சு பஸ்சை தொடர்ந்து இயக்குனாங்க...“இது சம்பந்தமா, விருதுநகர் அரசு போக்கு வரத்து கழக பொது மேலாளர் விசாரணை நடத்தி, டிரைவரை ஒரு மாசம், 'சஸ்பெண்ட்' செஞ்சாரு... ஆனா, தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளோ, 'டிரைவர் சஸ்பெண்டை மூணு நாளா குறைச்சு, அவருக்கு பணி வழங்கணும்'னு பொது மேலாளருக்கு நெருக்கடி தந்தாங்க...“விவகாரம், போக்கு வரத்து துறையின் செயலர் பணீந்திர ரெட்டி கவனத்துக்கு போச்சு... அவரோ, 'பயணியர் பாதுகாப்பு விவகாரத்துல சமரசமே கிடையாது... ஒரு மாசம் சஸ்பெண்ட் கட்டாயம்'னு சொல்லிட்டாருங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
மே 31, 2025 18:57

Tasmac வருமானத்தைப் பெருக்கி 'உதவி' செய்ததற்கா சஸ்பெண்ட் ? அநியாயம் எல்லா சங்கங்களும் சேர்ந்து இனி பேருந்துகளை எடுப்பது முதல் இடையிடையிலும் 'தாகசாந்தி' செய்ய அனுமதி வேண்டி போராட வேண்டும்


shyamnats
மே 31, 2025 09:28

அரசு பணியை டாஸ்மாக் சரக்கை வாங்குவது மற்றும் குடிப்பதை செய்ய விடாமல் தண்டிப்பதை ஏற்று கொள்ள முடியாது. சம்பளத்தோட தான சஸ்பென்ஷன் ? - இப்படிக்கு பொது மக்கள்


R.RAMACHANDRAN
மே 31, 2025 07:54

இந்நாட்டில் சங்கங்கள் அவற்றின் உறுப்பினர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை இல்லாமல் காப்பாற்ற போராடுவதால் அரசு ஊழியர்களிலிருந்த்து அனைத்து விதமான ஊழியர்களும் குற்றங்களை துணிந்து செய்கின்றனர்.


Anantharaman Srinivasan
மே 31, 2025 01:08

போதை டிரைவருக்கு தி.மு.க., தொழிற்சங்கம் வக்காலத்து மேலாளர் செயலாளர் ஒருமாத சஸ்பெண்ட் உறுதி செய்ததை தொடர்ந்து போக்குவரத்து மந்திரியிடம் போனால் ..??


சமீபத்திய செய்தி