நாளிதழை மடித்தபடியே, “தேர்தல் நெருங்குறதால, தொகுதி பக்கம் தலைகாட்டுறாங்க...” என பேச்சை துவங்கினார், அந்தோணிசாமி.“எந்த ஊர் எம்.எல்.ஏ., வை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.“சேலம் மாவட்டம், ஏற்காடு எம்.எல்.ஏ.,வா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சித்ரா இருக்காங்க... 2021 தேர்தல்ல ஜெயிச்சவங்க, 2024 லோக்சபா தேர்தல்ல ஓட்டு கேட்க தான், தொகுதி மக்களை சந்திச்சாங்க... அப்புறமா, தொடர்பு எல்லைக்கு அப்பால போயிட்டாங்க...“இவங்க தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி, அயோத்தியா பட்டணம், ஏற்காடு பகுதி மக்கள், சித்ரா மீது கடும் அதிருப்தியில இருக்காங்க... இந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், சித்ரா கவனத்துக்கு இதை கொண்டு போய், 'சீக்கிரமே தேர்தல் நடக்க போறதால, மக்களை போய் பாருங்க'ன்னு அறிவுறுத்தியிருக்காங்க...இதனால, இப்ப தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் பத்தி எம்.எல்.ஏ., ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.“என்கிட்டயும் ஒரு எம்.எல்.ஏ., மேட்டர் இருக்குது பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்... 'மாஜி' அமைச்சர் பொன்முடியும், அவரது மகனும், மாவட்ட செயலருமான கவுதமசிகாமணியும், வர்ற தேர்தல்ல விக்கிர வாண்டி தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்துறாங்க பா...“தங்களது குடும்பத்துக்கு சொந்தமான பள்ளி, கல்லுாரிகள் எல்லாம் விக்கிரவாண்டி தொகுதியில் இருப்பதால, இந்த தொகுதியை வசப்படுத்த நினைக்கிறாங்க... இதனால, அப்பாவும், மகனும் கலந்துக்கிற நிகழ்ச்சிகளுக்கு அன்னியூர் சிவாவை அழைக்க மாட்டேங்கிறாங்க பா...“விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்... சிவாவை புறக்கணிக்கிறதால, தி.மு.க.,வுல இருக்கிற அந்த சமுதாயத்தினர் எல்லாம், பொன்முடி மேல அதிருப்தியில இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.“அ.தி.மு.க., பிரமுகருக்கு ஒத்தாசை பண்ணிய தி.மு.க., புள்ளி கதையை கேளுங்கோ ஓய்...” என்றார், குப்பண்ணா.“எந்த ஊருல வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள்ல, 10.50 கோடி ரூபாய் மதிப்புல சாலை பணிகளுக்கு போன மாசம் டெண்டர் விட்டா... இந்தடெண்டர்களை அ.தி.மு.க., பிரமுகர் ஒருத்தர் எடுத்து இருக்கார் ஓய்...“தி.மு.க., ஆட்சியில, அவா தயவு இல்லாம டெண்டர் கிடைக்குமா...திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய ஆளுங்கட்சி புள்ளி தான், இந்த டெண்டரை எடுத்து கொடுத்து, 5 பர்சன்ட் கமிஷனும் வாங்கிண்டிருக்கார் ஓய்...“அவரை மேலும் குஷிப்படுத்தி, இன்னும் பல டெண்டர்களை எடுக்க பிளான் போட்ட அ.தி.மு.க., பிரமுகர், தி.மு.க., புள்ளி மற்றும் அவரது வலதுகரமா வலம் வர்றவரை, துபாய்க்கு ஒரு வாரம் டூர் அழைச்சுண்டு போயிருக்கார்... திருவாலங்காடு தி.மு.க.,வினர், 'நம்ம கட்சியினருக்கு உதவி பண்ணாம, எதிர்க்கட்சிக்காரருக்கு உதவி செய்துட்டு, இன்பச்சுற்றுலா வேற போயிருக்காரே'ன்னு புலம்பறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.“வாங்க முருகவேல்...மகாலிங்கம் புண்ணியத்துல உம்ம வண்டி ஜோரா ஓடுதுல்லா...” என, நண்பரிடம் அண்ணாச்சி பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.