''த லைக்கு ஒரு ரூபாய் வசூலிக்க போறார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்துல, சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் இருக்கு... கிட்டத்தட்ட, 1,000 வருஷங்கள் பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமான, 31 சென்ட் நிலத்தை சிலர் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்து, கட்டடங்களையும் கட்டிட்டா ஓய்... ''அதே பகுதியைச் சேர்ந்த, மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக் குழு உறுப்பினரான நாகபூஷணம் என்பவர், அறநிலையத் துறைக்கு புகார் அனுப்பினார்... ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பை உறுதி பண்ணி, அது சம்பந்தமான அறிக்கையை திருவள்ளூர் கலெக்டருக்கு அனுப்பியிருக்கா ஓய்... ''ஆனா, பல மாசமாகியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கல... இதனால நாகபூஷணம், ஆக்கிரமிப்பு அகற்றும் செலவுக்காக, பக்தர்களுடன் சேர்ந்து தலைக்கு ஒரு ரூபாய் வசூல் பண்ணி, அரசுக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்த முடிவு பண்ணியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''அறநிலையத் துறை சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்ல...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''முதன்மையான பிரசித்தி பெற்ற கோவில்கள்ல இருக்கற அக்கவுன்டன்ட், கேஷியர் எல்லாம் இன்னும் கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்துக்காம இருக்காவ... சிலருக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சிருந்தாலும், தெரியாதது மாதிரி கம்முன்னு இருக்காவ வே... ''இதனால, அவங்க செய்ய வேண்டிய கம்ப்யூட்டர் வேலைகளை எல்லாம் தட்டச்சர் களிடம் குடுத்துடுதாவ... ஏற்கனவே, தட்டச்சர்கள் கம்மியா தான் சம்பளம் வாங்குதாவ வே... ''அவங்களுக்கு இது கூடுதல் வேலைப்பளுவா இருக்கு... இதனால, 'கோவில் பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கணும்'னு புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''குத்தாட்டத்தால நொந்து போயிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய். ''யாருங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவரின், 50வது பிறந்த நாள் விழா, சமீபத்துல சென்னையில் பிரமாண்டமா நடந்துச்சு... அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் பெரிய பெரிய பேனர்கள், போஸ்டர்கள்னு கலக்கியிருந்தாங்க பா... ''பெரும்பாலான கல்வி அதிகாரிகள் பங்கேற்று, பரிசு பொருட்களை தாராளமா வழங்கி இருக்காங்க... ராத்திரி, 9:00 மணிக்கு மேல கல்வி இயக்குநர் ஒருத்தர் வாழ்த்து சொல்ல போயிருக்காரு பா... ''அவர் மேடையில இருந்தப்ப, உற்சாகத்துல சில ஆசிரியர்கள் டான்ஸ் ஆடியிருக்காங்க... இதுல, பெண் ஆசிரியை ஒருத்தரும் ஆட்டம் போட்டிருக்காங்க பா... ''இதை சிலர் வீடியோ எடுத்து, 'இயக்குநர் முன்னிலையில் ஆசிரியர்கள் குத்தாட்டம்'னு சமூக வலைதளங்கள்ல பரப்பிட்டாங்க... இதனால, 'ஏன்டா அந்த நிகழ்ச்சிக்கு போனோம்'னு இயக்குநர் நொந்து போயிருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய். ''வாங்கோ தியாகராஜன்... உம்ம வீட்டு பங்ஷன் சிறப்பா நடந்துச்சோல்லியோ... நரேஷ் வந்தாரோன்னோ...'' என, நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.