நாளிதழை மடித்தபடியே, “கோஷ்டி, கோஷ்டியா பிறந்த நாளை கொண்டாடுனாவ வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.“காங்கிரஸ்ல தானே பா...” என, பட்டென கேட்டார், அன்வர்பாய்.“ஆமா... தமிழக காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன்ல, போன 14ம் தேதி, அம்பேத்கர் மற்றும் முன்னாள் எம்.பி., வசந்தகுமாரின் பிறந்த நாளை கொண்டாடு னாங்கல்லா... இதுல, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர்னு பலரும் கலந்துக்கிட்டாவ வே... “அதேநேரம், செல்வப்பெருந்தகைக்கு எதிரான சென்னை மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், திரவியம் ஆகியோர், துறைமுகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிச்சாவ... இதுக்கு, முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசரை மட்டும் கூப்பிட்டிருந்தாவ வே...“அவரும் தட்டாம கலந்துக்கிட்டாரு... காங்கிரஸ்ல இன்னொரு குரூப், ராயபுரத்தில் சட்ட பாதுகாப்பு பேரணி நடத்தி, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுச்சு வே...” என்றார், அண்ணாச்சி.“சாலையை பராமரிக்க தயக்கம் காட்டுறாங்க...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.“எந்த ஊருல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா. “சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு கோலடி சாலையில், மின் விளக்குகள் மற்றும் சாலை பராமரிப்பு பணியை, காலங்காலமா திருவேற்காடு நகராட்சி தான் கவனிச்சது... 1.5 கி.மீ., நீளமுள்ள இந்த சாலையின் இருபுறமும், கருவேல மரங்கள் வளர்ந்து அடர்வனம் மாதிரி இருக்குதுங்க...“ஆவடியில் இருந்து திருவேற்காடு, அயப்பாக்கம், அத்திப்பட்டு, பூந்தமல்லி வழியா அம்பத்துார் போகும் வாகனங்கள், 10 கி.மீ., சுற்றி போறதுக்கு பதிலா, இந்த சாலையில சீக்கிரமா போயிடும்...“இந்த சாலையை ஒட்டியிருக்கிற குடியிருப்புகள் எல்லாம் ஆவடி மாநகராட்சி வசம் போயிட்டதால, அஞ்சு வருஷமா இந்த சாலை பராமரிப்பை திருவேற்காடு நகராட்சி கண்டுக்கல... இதனால, சாலை குண்டும், குழியுமா கிடக்குதுங்க...“ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தட்டுத் தடுமாறி தான் போக வேண்டியிருக்கு... கருவேல மரங்களுக்கு மத்தியில இருக்கிற மின் விளக்குகளும் உடைஞ்சு கிடக்குது...“இருள் சூழ்ந்து கிடக்கிறதால, வாகன ஓட்டிகள் பயந்துட்டே தான் போறாங்க... 'இந்த சாலைக்கு எப்பதான் விடியல் பிறக்கும்'னு கேட்கிறாங்க...” என்றார், அந்தோணிசாமி.“லீவ் நாள்ல கூட்டம் போட்டு பாடாபடுத்தறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“தமிழக ஹிந்து சமய அறநிலைய துறையில் ஏகப்பட்ட பணியிடங்கள் காலியா கிடக்கறது... இதனால, செயல் அலுவலர்கள் கூடுதல் வேலைப்பளுவால அவதிப்படறா ஓய்...“சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள்ல உற்சவங்கள், திருவிழாக்கள் வந்தா, விடுமுறை எடுக்காம வேலை பார்க்கறா... இதுக்கு நடுவுல, விடுமுறை தினங்கள்ல அதிகாரிகள் சீராய்வு கூட்டம் நடத்தறதால, செயல் அலுவலர்கள், 'குடும்பத்தை கவனிக்க முடியல'ன்னு புலம்பறா ஓய்...“சில கோவில் செயல் அலுவலர்கள், வெளியூர்ல இருந்து வந்தும் வேலை பார்க்கறா... இவா, வார விடுமுறை நாட்கள்ல தான் ஊருக்கு போவா ஓய்...அப்பவும், அதிகாரிகள் சீராய்வு கூட்டங்களை போட்டு படுத்தி எடுக்கறதால, ஊருக்கு போக முடியாம தவிக்கறா... இதனால, 'அலுவலக வேலை நாட்கள்ல சீராய்வு கூட்டங்களை நடத்தணும்'னு சொல்றா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.