பில்டர் காபியை பருகியபடியே, ''8 கோடி ரூபாயை சாப்பிட்டவாளுக்கு காப்பு காத்துண்டு இருக்கு ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழக வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்துக்கு, கூடுதல் இழப்பீடு கேட்டு, நிலத்தின் உரிமையாளர் ஒருத்தர் கோவை சப் கோர்ட்ல வழக்கு போட்டிருந்தார்... இதுல, அவருக்கு 8 கோடி ரூபாய் வழங்க கோர்ட் உத்தரவு போட்டது ஓய்...''ஆனா, நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாம, போலி கையெழுத்திட்ட ஆவணங்களை கொடுத்து, 8 கோடி ரூபாய்க்கான, 'செக்'கை வாங்கி வக்கீல் மற்றும் முன்னாள் அரசு வக்கீல் சேர்ந்து மோசடி செய்துட்டா... ''இது சம்பந்தமா நிலத்தின் உரிமையாளரின் வாரிசுகள், சென்னை ஐகோர்ட்ல வழக்கு போட்டிருக்கா... இந்த மோசடியில சம்பந்தப்பட்டவா சீக்கிரமே கைதாவான்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''அமைச்சருக்கும், மாநகர செயலருக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''ஈரோடு மாநகராட்சியில், போன வருஷம் சொத்து வரியை, 300 சதவீதம் உயர்த்திட்டாங்க... சமீபத்துல நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஓட்டு கேட்டு போன இடத்துல எல்லாம், சொத்து வரி உயர்வை குறிப்பிட்டு மக்கள் குமுறிட்டாங்க...''சொத்து வரி உயர்வை கண்டிச்சு, பா.ஜ.,வும் போராட்டம் அறிவிச்சதால, வரியை குறைக்கிறதுக்கான தீர்மானத்தை போன மாதம் மாநகராட்சி கூட்டத்துல நிறைவேத்தினாங்க... ''இந்த தீர்மான நகலை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, முதல்வர் ஸ்டாலினிடம், முத்துசாமி குடுத்து, வரியை குறைக்க வலியுறுத்தி இருக்காருங்க...''அவங்க, 'வரியை உயர்த்தும்போதே யோசனை பண்ணியிருக்க வேண்டாமா'ன்னு சிடுசிடுத்திருக்காங்க... ''இதை, ஈரோடு மேயரான நாகரத்தினத்தின் கணவரும், மாநகர தி.மு.க., செயலருமான சுப்பிரமணியத்திடம் அமைச்சர் சொல்லி, 'என்கிட்ட கேட்காம வரியை உயர்த்தி, என்னை தர்மசங்கடத்துல தள்ளிட்டீங்களே'ன்னு சத்தம் போட்டிருக்காருங்க...''இதனால, இப்ப அமைச்சர் கலந்துக்கிற கூட்டங்கள்ல, சுப்பிரமணியம் தலையை காட்டுறது இல்ல... அப்படியே வந்தாலும், கடைசி பெஞ்ச் மாணவர் போல ஓரமா உட்கார்ந்துட்டு, கிளம்பிடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''வாரி குவிக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''முதல்வர் ஸ்டாலினின், சென்னை கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம், ரெட்டேரி சந்திப்புகள்ல மெட்ரோ திட்டப் பணிகள் நடக்கிற தால, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுது... ''இப்பகுதியின் போக்குவரத்து போலீஸ் பெண் அதிகாரி, சக போலீசாரை சகட்டுமேனிக்கு திட்டி, வாகன ஓட்டிகளிடம் கறாரா வசூல் வேட்டை நடத்தச் சொல்றாங்க பா...''அதுவும் இல்லாம, சாலை போடுறவங்க, வடிகால் கட்டுற கான்ட்ராக்டர்களிடம், 'போக்கு வரத்து விதிமீறல் நடவடிக்கை எடுத்துடுவேன்'னு மிரட்டியே, வசூலை வாரி குவிக்கிறாங்க... இவங்க மேல நிறைய புகார்கள் போயும், அடாவடி வசூல் குறையலை பா...'' என முடித்தார், அன்வர்பாய்.டீ கடை ரேடியோவில், 'உமா மகேஸ்வரியே... உலகை காக்கும் பரம்பொருளே...' என்ற, திருவிளையாடல் படத்தின் வசனம் ஒலிக்க, நண்பர்கள் ரசித்தபடியே கிளம்பினர்.