இருளர்களுக்கு வீடு கட்டும் பணி மந்தம் தாசரி குன்னத்துாரில் தொடரும் அவலம்
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த தாசரி குன்னத்துாரில், இருளர் இன மக்களுக்கான வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சி, தாசரி குன்னத்துார் கிராமத்தில், பல ஆண்டுகளாக பழங்குடி இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா இல்லாததால், ஏரி நீர் பிடிப்பு பகுதியில் வசித்து வந்தனர். எனவே, தங்களுக்கு வீட்டுமனை கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பல ஆண்டுகளுக்குப் பின், தாசரி குன்னத்துார் கிராமத்தில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் மனைப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. மேலும், 2023ம் ஆண்டு ஆக., மாதம், பழங்குடியினருக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தில், 22 வீடுகள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 'தலா 4.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கழிப்பறை வசதியுடன் வீடுகள் கட்டப்பட்டு, சில மாதங்களில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்' என, அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த பணிகள் துவக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை பணிகள் முடியவில்லை. இது குறித்து பயனாளிகள் கூறியதாவது: வீடுகள் கட்டும் பணிகள் வேகமாக துவக்கப்பட்டு, தற்போது மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. வீடுகள் கட்டுவதற்கான மாதிரி படத்தைக் கூட, எங்களிடம் காட்டவில்லை. முதலில் 2 கதவுகள், 4 ஜன்னல்கள் மற்றும் கழிப்பறை கட்டப்படும் என தெரிவித்தனர். அதன் பின் ஒரு கதவு, ஒரு ஜன்னல் மட்டுமே அமைக்கப்பட்டது. ஜன்னல் வைப்பதற்கான இடம் காலியாக உள்ளது. மின் இணைப்புக்கு ஒயர்கள் கூட அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, தெரு விளக்கு வெளிச்சத்தில் விஷ ஜந்துக்களின் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. துவக்கத்தில் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் பணியை முடிக்காமல், பாதியில் நிறுத்திவிட்டுச் சென்று விட்டார். தற்போது வேறு ஒருவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே போல, இங்கு சரியான சாலை வசதியும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.