அரசு அலுவலகங்களில் லிப்ட் வசதி தேவை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வணிக வரித்துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலகங்கள் ஒரே கட்டடத்தில் இயங்கி வருகின்றன.இதில் தரை மற்றும் முதல் தளத்தில் வணிக வரித்துறையும், இரண்டாவது தளத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி கமிஷனர் அலுவலகமும் செயல்படுகிறது.இங்கு ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இக்கட்டடத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவையான லிப்ட் வசதி இல்லை. இந்த அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு செல்வதற்கு படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.படிக்கட்டு ஏறும்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். லிப்ட் வசதி இல்லாதது, அனைத்து தரப்பினருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே, பொதுப்பணித்துறை இக்கட்டடத்தில் லிப்ட் வசதியை செய்து தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.