உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  அதிகாரிகளை மிரட்டும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்!

 அதிகாரிகளை மிரட்டும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்!

“வீடு தேடிண்டு இருக்கா ஓய்...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா. “யாருக்கு பா...” என கேட்டார் அன்வர்பாய். “தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜை, திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரா போட்டிருக்கால்லியோ... சமீபத்துல திருப்பூர் வந்த இவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார் ஓய்... “அப்புறமா கலெக்டர் ஆபீஸ்ல ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர், 'மருத்துவக் கல்லுாரிக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் எவ்வளவு துாரம்... எந்தெந்த வழிகள்ல வந்து போகலாம்'னு அதிகாரிகளிடம் விளக்கமா கேட்டிருக்கார் ஓய்... “அருண்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்தவர்... அடிக்கடி அங்கிருந்து வந்துட்டு போக முடியாதுங்கறதால, கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனைக்கு சீக்கிரம் வந்து போற மாதிரி, திருப்பூர் சிட்டிக்குள்ளயே வாடகைக்கு வீடு பார்க்கச் சொல்லியிருக்கார்... அவருக்காக த.வெ.க., நிர்வாகிகள் வீடு தேடிண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா. “என்கிட்டயும் திருப்பூர் தகவல் ஒண்ணு இருக்குல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “திருப்பூர் மாவட்டத்தில் நிறைய தனியார் பள்ளிகள் இருக்கு... மூணு வருஷங்களுக்கு ஒருமுறை இதன் உரிமத்தை புதுப்பிக்கணும்... கல்வித் துறை அதிகாரிகள், பள்ளியில் ஆய்வு பண்ணிய பிறகு தான் உரிமத்தை புதுப்பிச்சு தருவாவ வே... “ஆனா, பள்ளிகள்ல ஆய்வு நடத்தவே அதிகாரிகளுக்கு, 'கட்டிங்' வெட்டணும்... யாராவது பணம் தர மறுத்தா, ஆய்வுக்கே வராம இழுத்தடிக்காவ வே... “தி.மு.க., ஆட்சியில இருந்த இந்த நிலை இப்ப மாறிட்டுன்னு சொன்னாலும், திருப்பூர்ல பழைய கதை தான் தொடருது... 'தனியார் பள்ளி நிர்வாகிகள் எந்த விஷயத்துக்கும் லஞ்சம் தர வேண்டாம்'னு துறையின் அமைச்சர் ராஜ்மோகன் சொல்லிட்டே இருந்தாலும், திருப்பூர்ல இருக்கிற அதிகாரிகள், அதை காதுலயே போட்டுக்கல வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “எம்.எல்.ஏ., பெயர்ல மிரட்டுறாங்க...” என கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி. “எந்த தொகுதியில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர் கதிரவன்... இவர், சமீபத்துல மணப்பாறை பஸ் ஸ்டாண்ட்ல ஆய்வு செஞ்சாருங்க... “அப்ப, பஸ் ஸ்டாண்ட்ல நடைபாதைகளை ஆக்கிரமிச்சு கடை வச்சிருந்தவங்களை பத்தி பயணியர் புகார் சொன்னாங்க... இதனால, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி எம்.எல்.ஏ., உத்தரவு போட்டாருங்க... “இதன்படி, நகராட்சி அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்றினாங்க... ஆனா, எல்லாம் ரெண்டே நாள் தான்... மறுபடியும் நடைபாதையை ஆக்கிரமிச்சு கடைகளை போட்டுட்டாங்க... “இதனால நடக்க முடியாம பாதிக்கப்பட்ட சிலர், 'எம்.எல்.ஏ.,விடம் புகார் செய்வோம்'னு சொன்னதுக்கு, 'தாராளமா போய் சொல்லுங்க... எம்.எல்.ஏ., தரப்பை கவனிச்சிட்டு தான் கடை போட்டிருக்கோம்'னு பொதுமக்களை வியாபாரிகள் மிரட்டியிருக்காங்க... “இதுக்கு இடையில எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சிலரும், நகராட்சி அதிகாரிகளுக்கு போன் போட்டு, 'யாரை கேட்டு பஸ் ஸ்டாண்ட்ல இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை எடுத்தீங்க'ன்னு மிரட்டுறாங்க... இதனால, நகராட்சி அதிகாரிகள் நொந்து போயிருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி. பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 26, 2026 19:07

எந்த அரசு வந்தாலும் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்துவது கஷ்டம். லோக்கல் கட்சி MLA ஆட்களுக்கு தினமும் மாமூல் கிடைக்கிறது.


D.Ambujavalli
ஜூன் 26, 2026 18:36

இது. என்ன, பாம்புக்கு. வாலும் மீனுக்குத். தலையும். காட்டியது. போல’. எம். . எல். என். பேச்சு. இருக்கிறதே கடைக்காரர்கள். தைரியமாக. எம். எல்.. ஏ. வைக்கவனித்திட்டுவிட்டோம். என்கிறார்கள். என்றால், எம். எல். எ பந்தை, நகராட்சியரிடம் தள்ளிவிட்டு, விலகுவதாகத்தான் தெரிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை