பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் முத்துவின் வெண்கல சிலையை, போன வாரம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாருல்லா... இது சம்பந்தமா, ஒரு வரலாற்று தகவலை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''அதாவது, 1971ல் மதுரை மாநகராட்சியா தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தல்ல, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கல... இன்றைய பா.ஜ., அன்னைக்கு ஜனசங்கம் என்ற பெயர்ல இயங்குச்சு வே...''ஜனசங்கத்தின் ஒரே ஒரு கவுன்சிலர் ஆதரவுடன் தான், தி.மு.க.,வின் மதுரை முத்து அன்னைக்கு மேயரானாரு... இப்ப, நாகாலாந்து கவர்னரா இருக்கிற இல.கணேசன் தான், அப்ப ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை அமைப்பாளரா இருந்தாரு வே...''அவரிடம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பேசி, கவுன்சிலர் ஆதரவை கேட்டு வாங்குனாரு... அடுத்து, தமிழக சட்ட மேல்சபைக்கு நடந்த தேர்தல்ல, மதுரை பட்டதாரி தொகுதியில் போட்டியிட்ட பழனிவேல் ராஜனுக்கு ஜனசங்கம் ஆதரவு குடுத்துச்சு வே...''இந்த வரலாற்றை சமூக வலைதளங்கள்ல சிலர் வெளியிட்டு, 'அ.தி.மு.க.,வுக்கு முன்பே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைச்சவர் கருணாநிதி'ன்னு பரப்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பறக்கும் படையினர் படுத்து துாங்கறாளான்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், திருப்பூர்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பறக்கும் படை அமைச்சிருக்கா ஓய்...''ஆனாலும், அதிகாலை, 2:00 முதல் 3:30 மணிக்குள்ள, திருப்பூர்ல நீர்நிலைகள் மற்றும் பாலங்களின் ஓரங்கள்ல குப்பைகழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டிட்டு போயிடறா... சில தொழிற்சாலைகளின் சாயக்கழிவு நீரை, நீர்நிலைகளில் வெளியேத்தறா ஓய்...''மாநகராட்சி எல்லைக்குள்ள நடக்கற இந்த அத்துமீறல்களை, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கண்டுக்க மாட்டேங்கறா... ''இதனால, 'மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் இணைந்து, என்னென்ன நடவடிக்கை எடுத்தோம்னு மாசா மாசம் அறிக்கை தாக்கல் பண்ண, அதிகாரிகள் உத்தரவு போடணும்'னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பலரை மெடிக்கல் லீவுல அனுப்பிட்டு இருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சியில் முக்கிய அதிகாரியா இருக்கிறவர், அதிகாரிகள், ஊழியர்களை இம்சைப்படுத்தி வேலை வாங்குறாரு... கடந்த நிதியாண்டில் அனைத்து வரிகளையும் வசூல் பண்ணி, உயர் அதிகாரிகளிடம் அவர் நல்ல பெயர் எடுக்கிறதுக்காக, கொசு மருந்து அடிக்கிறவங்க, துாய்மை பணியாளர்கள்னு எல்லாரையும் களம் இறக்கி, வரி வசூல் பணிகளை முடுக்கி விட்டாரு பா...''அதிகாரியின் டார்ச்சரால, இன்ஜினியர் ஒருத்தர் போன மாசம் மெடிக்கல் லீவுல போயிட்டாரு... இந்த மாசம் பிறந்ததுமே, நகராட்சி வருவாய் ஆய்வாளரா இருந்த பெண் அதிகாரி, மெடிக்கல் லீவுல போயிட்டாங்க...''இதனால, 'அதிகாரி, அடுத்து யாரை மெடிக்கல் லீவுல அனுப்புவார்'னு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் எல்லாம் கவலையோடு தங்களுக்குள்ள பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.எதிரில் வந்த நண்பரிடம், ''கோபிநாத்கிட்ட பேசிட்டேன்... முடிச்சு குடுத்துடுவாரு வே...'' என, அண்ணாச்சி பேச, மற்றவர்கள் கிளம்பினர்.