உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வசூல் ஸ்பாட்டை மாற்றிய அதிகாரிகள்!

வசூல் ஸ்பாட்டை மாற்றிய அதிகாரிகள்!

''நே ரம், காலம் இல்லாம மது விற்பனை நடக்குது பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய். ''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சென்னை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகள்ல இருக்கிற டாஸ்மாக் பார்கள், 24 மணி நேரமும் இயங்குது... போன மாசம் 27ம் தேதி திருவேற்காடு, கோலடி பகுதியில இருக்கிற பார்ல, மது வாங்கி குடிச்ச நண்பர்களுக்கு இடையில தகராறு ஏற்பட்டு, வாலிபர் ஒருத்தரை பீர் பாட்டிலால குத்தி கொன்னுட்டாங்க பா... ''அதுக்கு சில நாட்களுக்கு முன்னாடி தான், 'விதிகளை மீறி இயங்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'னு போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி குடுத்திருந்தாரு... அதுக்கப்புறமும் நடந்த இந்த கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு... 'இனியாவது, 24 மணி நேர பார்களை இழுத்து மூடணும்'னு ஆவடி மக்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''பந்தாவுக்கு போலீஸ் பாதுகாப்பை பயன்படுத்துதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், ஜூன் 28ல் நடந்த நகை திருட்டு விசாரணையில, போலீசார் அடிச்சதுல இறந்து போயிட்டாருல்லா... ''இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எல்லாரும், இப்ப ஜெயில்ல இருக்காவ... போலீசார் தாக்கியதை, மொபைல் போன்ல வீடியோ எடுத்த மடப்புரம் கோவில் ஊழியரான சக்தீஷ்வரனுக்கும், அவரது வீட்டுக்கும், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்காவ வே... ''சக்தீஷ்வரன், தனிப்பட்ட வேலையா அடிக்கடி மதுரைக்கு கார், பைக், பஸ்ல போறதால, பாதுகாப்பு போலீசாரும் கூடவே போக வேண்டியிருக்கு... ''அதுவும் இல்லாம, அடிக்கடி உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள்ல துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பந்தாவா கலந்துக் கிடுதாரு... ''இதை பார்த்துட்டு, வழக்கின் மற்ற சாட்சிகளும், அரசு தரப்பு வக்கீல்களும் தங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வேணும்னு கேட்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''தீபாவளி முடிஞ்சு, ரெண்டு வாரமாயிட்டாலும் வசூல் மேட்டர்களுக்கு பஞ்சமில்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''ஈரோடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில், தீபாவளிக்கு முன்னாடி, லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினா... அப்ப, உதவி செயற்பொறியாளர் குமரேசன், குவாரி உரிமையாளர் கந்தசாமி ஆகியோர் இருந்த அறையில், 3.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, 'கணக்கில் வராத பணம்'னு வழக்கு பதிவு பண்ணா ஓய்... ''இதனால, தீபாவளி வசூலுக்கு தயாராகிட்டு இருந்த மற்ற அதிகாரிகள் உஷாராயிட்டா... நீர்வளம், பொதுப்பணி, கனிம வளத்துறை அதிகாரிகள் பலரும், ஈரோடு காளிங்கராயன் அரசு விடுதி, லாட்ஜ்கள், தங்களுக்கு தெரிஞ்சவா, 'கெஸ்ட் ஹவுஸ்'கள்ல ரூம் போட்டு, தீபாவளி வசூலை நடத்தியிருக்கா ஓய்... ''வழக்கமா, அரசு ஆபீஸ்கள்ல, அதிகாரிகளுக்கு தீபாவளி, 'கவனிப்பு' செய்ய வரவா, அங்க இருக்கும் பியூன்கள், துாய்மை பணியாளர்கள், டிரைவர்களுக்கு, 500, 1,000 ரூபாய்னு குடுத்துட்டு போவா... 'இந்த முறை, அதிகரிகள் வசூல் ஸ்பாட்டை மாத்திட்டதால, எங்களுக்கு எதுவும் தேறல'ன்னு இவாள்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sainathan Veeraraghavan
நவ 02, 2025 16:18

ஆக தமிழ்நாட்டில் எல்லோரும் லஞ்சத்தில் திளைக்க விரும்புகிறார்கள் . நாடு உருப்பட்டுவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை