உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தியேட்டர் நிர்வாகத்தால் அலறும் அதிகாரிகள்!

தியேட்டர் நிர்வாகத்தால் அலறும் அதிகாரிகள்!

''காலியிடங்கள் எண்ணிக்கை ஜாஸ்தி யாகிட்டே போறது ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக வேளாண் துறையில், மாவட்ட அளவுல இணை இயக்குனர் பணியிடம் தான் ரொம்ப உயர்ந்த பதவி... ஆனா, 28 மாவட்டங்கள்ல இந்த இயக்குனர் பணியிடங்கள் காலியா கிடக்கறது ஓய்...''இன்னும் சில மாதங்கள் காத்திருந்தா, மிச்சம் சொச்சம் இருக்கறவாளும், 'ரிட்டயர்' ஆகி, அனைத்து மாவட்டங்கள்லயும், 'இணை இயக்குனர்களே இல்லாத துறை' என்ற பெருமை, வேளாண் துறைக்கு கிடைச்சிடும்...''துணை இயக்குனர்களை வச்சே, காலத்தை ஓட்டிடலாம்னு நினைக்கறாளோ என்னவோ... பதவி உயர்வுக்கு தகுதி, சீனியாரிட்டி இருந்தும், இணை இயக்குனர் பணியிடங் களை நிரப்பாமலே இருக்கறதால, பல அதிகாரிகளும் மனம் புழுங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''லஞ்சம் வாங்கி கைதானவருக்கு, முக்கிய பணியிடத்தை ஒதுக்கி யிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய ஒருத்தர், லஞ்சம் வாங்கி கைதானாரு... இதனால, 'சஸ்பெண்ட்' ஆன அவர் மீதான வழக்கு, கோர்ட்ல நிலுவையில இருக்குதுங்க...''ஜாமின்ல வந்தவர், தன் துறையில தடையின்மை சான்று வாங்கி, மறுபடியும் பணிக்கு வந்துட்டாரு... இது, வழக்கமான நடைமுறை தான்... ஆனா, இந்த மாதிரி குற்றச்சாட்டுல சிக்கினவங்களுக்கு, 'முக்கியமான, அதிகார மிக்க இடத்துல பணி வழங்க கூடாது'ன்னு விதி இருக்குதுங்க...''ஆனாலும், மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி தணிக்கை துறை அலுவலகத்தில் முக்கியமான இடத்துல, அவருக்கு பணி ஒதுக்கியிருக்காங்க... 'உயர் அதிகாரிகள் எப்படி இதை அனுமதிச்சாங்க'ன்னு, துறைக்குள்ள முணுமுணுப்புகள் கேட்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''ரமேஷ், இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, ''தியேட்டர் பெயரை கேட்டாலே, அலறுதாங்க வே...'' என்றபடியே தொடர்ந்தார்...''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கர்னுார் பகுதியில் பிரமாண்டமான சினிமா தியேட்டர் ஒண்ணு இருக்கு... தியேட்டரை நடத்துறவங்க, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை, கொளத்துார்ல குடியிருக்காவ வே...''சொல்ல போனா, முதல்வரின், எம்.எல்.ஏ., அலுவலகம் பக்கத்துலயே, தியேட்டர் நிர்வாகத்தினர் வீடு இருக்கு... அந்த வகையில, 'முதல்வர் தரப்புக்கு நாங்க நெருக்கம்'னு சொல்லிக்கிடுதாவ வே...''இதனால, உள்ளூர், தி.மு.க.,வினரும், தியேட்டர் நிர்வாகத்துக்கு பக்கபலமா இருக்காவ... சமீபத்துல தியேட்டர் நிர்வாகம், தன் தரைதளத்தை உயர்த்துச்சு... இதுல, பக்கத்துல இருந்த பயணி யர் நிழற்குடையின் தரைதள உயரத்தையும் ஏத்திட்டு வே...''இதனால, நிழற்குடையின் உயரம் குறைஞ்சு, பயணியர் நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... முதல்வருக்கு வேண்டியவங்க என்பதால, மாநகராட்சி நிர்வாகமும் இதை கண்டுக்கல வே...''எந்த விவகாரமா இருந்தாலும், தியேட்டர் தரப்பு, முதல்வர் பெயரை சொல்றதால, அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குதாவ... 'இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா' என்பது தான், மில்லியன் டாலர் கேள்வியா இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
அக் 28, 2024 22:30

ஒசூரில் தியேட்டர் அருகிலிருக்கும் பயணியர் நிற்க லாயக்கற்ற உயரம் குறைவான நிழற்குடையை போட்டோ எடுத்து,தினமலர் வாசகர் புகார் பகுதியில் வெளியிட்டால் தீர்வு கிடைக்கலாம். முதல்வருக்கு கவனத்துக்கும் போகலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை