உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கட்டு கட்டாக கரன்சிகளை வாங்கி குவிக்கும் அதிகாரிகள்!

 கட்டு கட்டாக கரன்சிகளை வாங்கி குவிக்கும் அதிகாரிகள்!

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''கட்டப்பஞ்சாயத்து மையங்களா மாறிட்டு இருக்கு வே...'' என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த ஊர் போலீசாரை சொல்றீர் ஓய்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா. ''திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்ல இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள்ல, பொதுமக்கள் குடுக்கிற புகார்களுக்கு தீர்வு கிடைக்க மாட்டேங்கு... புகார்கள் மீது போலீசாரே கட்டப்பஞ்சாயத்து பேசி, வசூல் வேட்டை நடத்துதாவ வே.... ''போலீஸ் தலையிடக் கூடாத சிவில் பிரச்னைகள்ல கூட மூக்கை நுழைச்சி, வசூல் பண்ணுதாவ... இங்க, சில விடுதிகள்ல முறைகேடா போதை பொருட்கள் புழங்குது வே... ''சுற்றுலா தலமா இருக்கிறதால, போதை பொருட்களை தேடியே இங்க நிறைய பேர் வர்றாவ... அஞ்சு வருஷத்துக்கும் மேலா இங்க இருக்கிற சில போலீஸ் அதிகாரிகள் கூட்டணி போட்டுக்கிட்டு, இந்த விடுதிகள்ல வசூலை வாரி குவிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''அதிகாரிகளை மாத்தினாலும், எஸ்.ஐ.,க்களை வச்சி காரியம் சாதிச்சிக்கலாம்னு நினைக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''துணை முதல்வர் உதயநிதியின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், வர்ற தேர்தல்ல வலிமையான வேட்பாளரை நிறுத்தணும்னு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைக்கிறாரு... இதுக்காக, அந்த தொகுதியில் இருக்கும் துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களை எல்லாம் மாத்தணும்னு, தேர்தல் கமிஷனுக்கு மனு கொடுக்க, அ.தி.மு.க., தரப்பு திட்ட மிட்டிருக்குதுங்க... ''ஆனா, ஆளுங்கட்சியினர் அசருவாங்களா... உயர் அதிகாரிகளை மாத்திட்டாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வர்ற எஸ்.ஐ.,க்களை தங்களுக்கு சாதகமா செயல்பட வச்சி, தேர்தலை சந்திக்க முடிவு பண்ணியிருக்காங்க... ''அதுவும் இல்லாம, உதயநிதிக்கு பம்பரமா சுழன்று தேர்தல் வேலைகளை செய்யணும்கிறதால, தொகுதியில் இருக்கிற தி.மு.க., பகுதி மற்றும் வட்டச் செயலர்களுக்கு வழக்கமான பொங்கல் பரிசோட, நிறைய சிறப்பு பரிசுகளை வழங்கியும் உற்சாகப்படுத்தி இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஆண், பெண் பேதமில்லாம கட்டு கட்டா வாங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கற, உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் நகரமைப்பு துறையை தான் சொல்றேன்... மதுரையில், முன்னாடி எல்லாம், ஒரு ஏக்கர் நிலத்தை பிரிச்சி, வீட்டு மனைகள் போடணும்னா, 'சென்னை வரை கப்பம் கட்டணும்'னு, 7 லட்சம் ரூபாய் வசூல் பண்ணிண்டு இருந்தா ஓய்... ''இப்ப, ஏரியாவுக்கு ஏற்ப, 10 முதல் 15 லட்சம் ரூபாய் வாங்கறா... வீட்டு மனைகள் மற்றும் தொழிற்சாலைக்கான கட்டுமான அனுமதி கேட்டு, இந்த ஆபீசுக்கு தினமும் கட்டு கட்டா பணத்தை எடுத்துண்டு பலரும் வரா ஓய்... ''ஆண், பெண் அதிகாரிகள்னு எந்த பேதமும் இல்லாம, பண கட்டுகளை வாங்கி கல்லாவுல போட்டுக்கறா... இதனால, 'சாந்த சொரூபியா இருக்கறவாளை கூட நம்ப முடியல'ன்னு இங்க வர்ற மக்கள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. -பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V GOPALAN
ஜன 25, 2026 04:16

In chepauk constituency for the last four years we are all getting variety of free item like cooker Grinder Kadai for Deepavali Pongal Nee year per ration card. Plus free money for major festival flood and moderate cyclone. Our vote is only to CM. Through world bank loan of 5 crores he is feeding us. Jai hind


Krishna
ஜன 24, 2026 10:18

Encounter All PowerMisusing Loot RulerBiased Officials


சமீபத்திய செய்தி