உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஊழல் பில்லுக்கு ஒப்புதல் பெற திட்டம்!

ஊழல் பில்லுக்கு ஒப்புதல் பெற திட்டம்!

''இலவசமா யாராவது சாலை போடுவாளா ஓய்...'' என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சென்னையை ஒட்டியிருக்கற ஆவடி மாநகராட்சி பகுதியில, 74 ஏக்கர்ல பாலேரிப்பட்டு ஏரி இருக்கு... பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கு ஓய்...''போன, 2022ல ஏரியை ஆக்கிரமிக்க ஏதுவா, சுடுகாடு அருகே உள்ள கரை மீது சாலை அமைக்க, மாநகராட்சி முடிவு பண்ணுச்சு... அப்ப, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால, சாலை அமைக்கும் பணியை நிறுத்திட்டா ஓய்...''இந்த சூழல்ல, போன வாரம் ஏரியில் புதுசா சாலை அமைக்கற பணி நடந்துது... 'இந்த சாலை அமைத்தால், ஏரியில் புதுசா ஆக்கிரமிப்பு ஏற்படும்'னு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிச்சா.... 'சாலை அமைக்கக் கூடாது'ன்னு மாநகராட்சி அதிகாரிகளும் உத்தரவு போட்டா ஓய்...''ஆனா, உள்ளூரைச் சேர்ந்த அமைச்சர் நாசர் அனுமதி தந்துட்டதா சொல்லி, கான்ட்ராக்டர் ஒருத்தர், பணமே வாங்காம ஏரியில, 10 மீட்டர் துாரத்துக்கு சாலை போட்டிருக்கார்... 'இந்த சாலையை தகர்த்து, அந்த கான்ட்ராக்டரை, 'பிளாக் லிஸ்ட்'ல சேர்க்கணும்'னு சமூக ஆர்வலர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ரோம் நகரம் தீ பத்தி எரிஞ்சப்ப, 'பிடில்' வாசித்த நீரோ மன்னன் மாதிரி நடந்துக்கிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''திருப்புவனம் அஜித்குமார் கொலை விவகாரத்துல, தமிழகமே கொந்தளிச்சிட்டு இருந்துச்சே... எல்லா கட்சித் தலைவர்களும், அரசுக்கு கண்டனம் தெரிவிச்சிட்டு இருந்தாங்க...''ஆனா, மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி.,யான வெங்கடேசன், 'ரயில் கட்டணம், கி.மீ.,க்கு, 5 பைசா உயர்த்திய மத்திய அரசை கண்டிச்சு, 'எக்ஸ்' தளத்துல பதிவு போட்டிருக்காரு... எல்லாரும் கண்டனம் தெரிவிக்கவே, ரெண்டு நாள் கழிச்சு, தி.மு.க., அரசு மீது ஒப்புக்கு கண்டனத்தை பதிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''புது கமிஷனரை சிக்க வைக்க பார்க்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''போலீஸ் தகவலா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''இல்ல... திருநெல்வேலி மாநகராட்சியில் போன வருஷம், 14 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே, பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினாங்க... ஆனா, 55 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதா, போலி பில்களை வச்சு ஊழல் செய்ய திட்டமிட்டாங்க பா...''இதுக்கு, அப்போதைய சுகாதார அதிகாரி டாக்டர் சரோஜா, எதிர்ப்பு தெரிவிக்கவே, அவங்களை, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க... அப்ப இருந்த மாநகராட்சி கமிஷனர் தாக்கரே, அந்த ஊழல் பில்லுக்கு அனுமதி தரல பா...''அப்புறமா வந்த கமிஷனரான சுகபுத்ரா, சமீபத்துல விருதுநகர் கலெக்டரா இடமாற்றம் செய்யப்பட்டாரு... அவர் கிளம்புறப்ப, அவரிடம் பில்லை நீட்டி, அதிகாரிகள் கையெழுத்து கேட்க, அவரோ, 'ஆளை விடுங்க சாமி'ன்னு நழுவிட்டாரு பா...''இப்ப, அந்த போலி பில்களுக்கு ஒப்புதல் தரும் தீர்மானத்தை மன்ற கூட்டத்துல நிறைவேற்றி, புதுசா வந்திருக்கிற கமிஷனரான, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மோனிகா ரானாவிடம் கையெழுத்து வாங்க திட்டம் போடுறாங்க...''மோனிகா ரானா, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், சென்னையில தான் படிச்சிருக்காங்க... 'தமிழ் நல்லா தெரிஞ்சவங்க என்பதால, வலையில சிக்க மாட்டாங்க'ன்னு நேர்மையான அதிகாரிகள் சொல்றாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 07, 2025 17:13

என்ன செய்வது? கூட்டணியில் இருந்துகொண்டு 'வாங்கிய' எம். பி பதவியை வைத்துக்கொண்டு உரக்கப் பேசிவிட முடியுமா? 'எல்லாரும் எதிர்க்கிறாங்க, நானும் சும்மா கோவிந்தா போடுகிறேன்' என்று குரல் கொடுத்து பதிவு செய்துகொண்டுவிட்டார் என்னடா ஊழலுக்கு வந்த சோதனை ஒரு அதிகாரி கூடவா அனுமதிக்க மாட்டார் ?


கண்ணன்
ஜூலை 07, 2025 12:23

கம்யூ கட்சிகளைப் பற்றி பாவம் குறைகளைச் சொல்லாதீர்- அங்குள்ள யாவரும் பள்ளிப் படிப்பைத் தாண்டாதபடியால் எல்லோரும் ஆளுக்கொரு உண்டியலோடு அலைந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு நேரம் சரியாக உள்ளது அவர்களுக்கு


முக்கிய வீடியோ