உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழக சட்டசபையில் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவக் கட்டமைப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும், பல்வேறு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாகவும் பெருமையாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களை, தங்கள் ஊதியத்திற்காக நீண்டகாலமாக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே உள்ளது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.இவர் என்ன தான் நினைவுபடுத்தினாலும், 'செலக்டிவ் அம்னீஷியா' மாதிரி அமைச்சர் காதுல விழவே விழாது! அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமியின் அபகரிப்பு அரசியலை எதிர்த்து, அ.ம.மு.க.,வை துவக்கிய தினகரனும், தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை துவக்கிய ஓ.பி.எஸ்.,சும், பழனிசாமியின் ஆக்கிரமிப்பு தலைமை அகற்றப்பட்டால் மட்டுமே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். அதை விடுத்து, தி.மு.க.,வை வீழ்த்த, 'பழனிசாமியை ஏற்கிறோம்' என்றால், அது அகற்ற முடியாத அநீதியை, அரசியல் லாபத்துக்காக ஏற்பது எனும் ஆதாய சகிப்புத்தன்மையாகி விடும். 'என்னை விரட்டியடித்த அ.தி.மு.க.,வை ஆதரிக்காதீங்க... என்னை மாதிரியே நீங்களும் அரசியல் அகதிகளா அலையுங்க'ன்னு சொல்றாரோ?தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: நாடு இக்கட்டான சூழலில் இருக்கும்போது, நாட்டிற்கு துணை நிற்காமல், நாட்டிற்கு எதிராக பேசுவதற்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில், 'மென்மையான மோடி வேண்டாம்; இரும்புக்கரம் கொண்டு கலவரங்களை அடக்கிய குஜராத் மோடி வேண்டும்' என்று, கோரிக்கை வைக்கும் கருத்து சுதந்திரமும் உள்ளது. பிரிவினைவாதத்தை நேரடி யாகவோ, மறைமுகமாகவோ ஆதரிப்போரை துாக்கிலிட வேண்டும் என்ற தேசியவாதிகளின் கோரிக்கையும் உள்ளது. தேவை ஒரு, 'எமர்ஜென்சி!'இந்திராவின் எமர்ஜென்சிக்கு எதிராக, மூச்சுக்கு முன்னுாறு முறை முழங்கிய, பா.ஜ.,வில் இருந்து இப்படி ஒரு கோரிக்கை எழுவதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: 'அரசியலமைப்பு சட்டம், 370ஐ நீக்கிய பிறகு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது' என, பா.ஜ.,வினர் கூறினர்; ஆனால், அங்கு அமைதி நீடிக்கவில்லை. அதானி, அம்பானிகள் ஜம்மு - காஷ்மீரில் பங்களாக்கள் கட்டவும், வணிகம் செய்யவும் தான் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அங்கு, அம்பானிகள் எத்தனை பங்களாக்கள் வாங்கியிருக்காங்க என்பதையும் இவர் பட்டியல் போடலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !