உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / விதிகளை மீறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை!

விதிகளை மீறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை!

டீயை பருகியபடியே, “வாரிசுக்கு வழிவிட போறாரு வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.“எந்த தலைவரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“திருப்பூர் மாவட்டம், அவிநாசி - தனி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர், முன்னாள் சபாநாயகர் தனபால்... இவரது சொந்த ஊர், சேலம் மாவட்டமா இருந்தாலும், ரெண்டு தேர்தல்கள்ல இங்க நின்னு ஜெயிச்சிருக்காரு வே...“வர்ற தேர்தல்ல, இந்த தொகுதியில் தன் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு 'சீட்' வாங்க காய் நகர்த்திட்டு இருக்காரு... இதுக்காகவே, தொகுதியில நடக்கிற விழாக்களுக்கு தன் மகனை அனுப்பி வச்சிடுதாரு வே...“இதனால, அவிநாசி தொகுதி கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில இருக்காவ... ஏன்னா, ரெண்டு வருஷமா தொகுதி பக்கமே தனபால் எட்டி பார்க்கல வே...“தனபாலை தொகுதி அலுவலகத்துல பார்த்து, குறைகளை தெரிவிக்க முடியாம உள்ளூர் மக்களும், கட்சி நிர்வாகிகளும் கடுப்புல இருக்காவ... இதனால, 'மறுபடியும் தொகுதியை தனபால் தரப்புக்கு தரக்கூடாது'ன்னு தலைமைக்கு பலரும் மனு அனுப்பிட்டு இருக்காவ...“இவங்க எதிர்ப்பால, அவிநாசி கைநழுவி போயிட்டா, அடுத்த தேர்வா ஈரோடு மாவட்டம் பவானிசாகர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிகளை கேட்க, தனபால் முடிவு பண்ணியிருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.“இவரை எப்படி கண்டுக்காம இருக்கான்னு ஆச்சரியப்படறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, 'டாஸ்மாக்' மதுபான கடையில் விற்பனையாளரா இருக்கற ஜெகதீஷ்வரன் என்பவர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் மாவட்ட இணை செயலராகவும் இருக்கார்... அரசுக்கு சொந்தமான டாஸ்மாக்ல பணியில இருந்துண்டே, கட்சி வேலைகளையும் செய்யறார் ஓய்...“நகர்ல பல இடங்கள்ல, இவரது படத்துடன் கட்சி போஸ்டர்களும் ஒட்டியிருக்கா... 'இது எல்லாம் அதிகாரிகள் கண்ணுல படலையா'ன்னு டாஸ்மாக் ஊழியர்களே முணுமுணுக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.“விதிகளை மீறி செயல்படுறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“தமிழகத்துல, சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு, 'டெட்' எனும் தகுதித்தேர்வு தேவையில்ல... இதை நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியிருக்குது பா...“சமீபத்துல இந்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்த மாவட்ட கல்வி அலுவலர் ஒருவருக்கு ஐகோர்ட், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிச்சிருக்கு...“மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், மாவட்டத்துக்கு ஒன்றிரண்டு சிறுபான்மையினர் பள்ளிகள் செயல்படுது... இந்த பள்ளிகள்ல ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' சான்றிதழை கட்டாயமா கேட்கிறாங்க பா...“சமீபத்தில், இப்பள்ளிகள்ல பணி நியமனம் கேட்டு விண்ணப்பிச்சவங்க மனுக்களை, 'டெட்' சான்றிதழ் இல்லன்னு நிராகரிச்சுட்டாங்க... 'டெட் சான்றிதழ் வாங்குங்க'ன்னு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் வலியுறுத்துறதா, பாதிக்கப்பட்டவங்க புலம்புறாங்க... 'இது சம்பந்தமா, அரசு தெளிவான வழிகாட்டுதலை வழங்கணும்'னும் அவங்க கேட்கிறாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை