உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / உங்களுடன் ஸ்டாலின் முகாமால் திணறும் பஞ்.,கள்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமால் திணறும் பஞ்.,கள்!

பெ ஞ்சில் அமர்ந்த படியே, ''ஆசிரியர்களிடம் பணிஞ்சு போயிட்டாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''பொதுவா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில், முதுகலை ஆசிரியரை தான் நியமிக்கணும்... ஆனா, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரேணுகா, பட்டதாரி ஆசிரியரை நியமிச்சுட்டாங்க பா... ''அதே போல, கல்வித் துறைக்கான கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனமும் சர்ச்சையாகிடுச்சு... இதை கண்டிச்சு, சி.இ.ஓ., அலுவலகத்தில், இந்திய ஆசிரியர் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினாங்க பா... ''அவங்களிடம், சி.இ.ஓ., இரவு வரை பேச்சு நடத்தியும் பயன் இல்ல... போராட்டம் தொடர்ந்தா, சென்னை வரை பதில் சொல்லணும்னு நினைச்ச, சி.இ.ஓ., மேடம், சங்க நிர்வாகிகள் சொல்ற ஆசிரியரையே, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரா நியமிக்க சம்மதிச் சுட்டாங்க பா... ''ஆனாலும், விடாத ஆசிரியர்கள், 'உங்க உறுதிமொழியை எழுதி குடுங்க'ன்னு, அவங்க கையால எழுதி வாங்கிட்டு தான், போராட்டத்தை முடிச்சிருக்காங்க... ஆசிரியர்கள் பிடிவாதத்துக்கு அதிகாரி பணிஞ்சுட்டதா, கல்வித் துறை ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''வழிப்பறி கொள்ளையால பீதியில இருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தர்மபுரி மாவட்டம், அரூர் வழியா, ராத்திரி நேரங்கள்ல போகும் லாரிகளை குறிவச்சு, சில இளைஞர்கள் வழிப்பறி கொள்ளை நடத்துதாவ... ''போன மாச கடைசியில, ராத்திரி, 10:00 மணிக்கு மாம்பட்டி அருகே மதுபானம் மற்றும் டிரான்ஸ்பார்மர் ஏத்திட்டு வந்த ரெண்டு லாரிகள் மீது, பைக்குல வந்த இளைஞர்கள் கற்களை வீசியதுல, லாரிகளின் கண்ணாடி உடைஞ்சிட்டு... உடனே, லாரியை நிறுத்திய டிரைவர்களை மிரட்டி, பணத்தை பறிச்சிட்டு ஓடிட்டாவ வே... ''சமீபத்துல, கோவைக்கு மது பாட்டில்கள் ஏத்திட்டு போன லாரியை, பைக்குல வந்த ரெண்டு வாலிபர்கள் மறிச்சு, டிரைவரிடம், 500 ரூபாய் கேட்டிருக்காவ... ''டிரைவர், 'பணமில்ல'ன்னு சொல்ல, 'ஆன்லைன்' பண பரிவர்த்தனையான, 'போன் பே'யில் போடுன்னு மிரட்டி வாங்கியிருக்காவ... 'நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் என்ன தான் பண்ணுதாவ'ன்னு லாரி டிரைவர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''பணமில்லாம தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர்ல, ஊராட்சி பகுதிகள்ல முகாம் நடத்தி, மக்களிடம் மனுக்கள் வாங்கறால்லியோ... இந்த முகாம்ல எல்லா துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள்னு குறைஞ்சது, 100 முதல், 150 பேர் கலந்துக்கறா ஓய்... ''அவாளுக்கு காலை, மதிய உணவு, குடிநீர், காபி, டீ உள்ளிட்ட வற்றை, அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் தான் ஏற்பாடு செய்யணும்... இதுக்காக ஒரு முகாமுக்கு, தலா, 55,000 ரூபாய் நிதி ஒதுக்கறா ஓய்... ''ஆனா, 150 பேருக்கு இது பத்துமா... கூடுதல் செலவுகளை ஊராட்சி நிர்வாகத்தினர், தங்களுக்கு தெரிஞ்சவாளிடம் கேட்டு வாங்கி சமாளிக்கறா ஓய்... ''இதுக்கு இடையில, இந்த, 55,000 ரூபாயையும், ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் தான், ஊராட்சிகளுக்கு விடுவிக்கணும்... ஆனா, பல ஒன்றியங்கள்ல இந்த நிதியை விடுவிக்காம இழுத்தடிக்கறதால, ஊராட்சி நிர்வாகத்தினர் முழிபிதுங்கி போயிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
அக் 21, 2025 18:38

பெரிதாக புதுமையாக செய்வதாக ஒவ்வொரு திட்டத்தையும் அறிவித்துவிட்டு, கீழ்நிலையில் உள்ள கிராம அதிகாரிகளின் கழுத்தை நெறிக்கும் இந்த திட்டங்கள்தான் ஓட்டுக்களைக் குவிக்கப் போகிறதா? இவரது விளம்பரம், நிர்வாகிகளின் பர்ஸைப் பழுது செய்கிறதே, பாவம்


RAVI
அக் 21, 2025 15:19

மறைமலை நகர் பகுதியில் உள்ள செங்குன்றம் Tasmacல் காலை 6 மணிக்கு சரக்கு கிடைக்கும்...


duruvasar
அக் 21, 2025 09:25

எதிலும் ஊழல் எப்படியும் ஊழல எப்போதும் ஊழல் இப்படி ஒரு தலைமுறையையே உருவாகிவிட்டார்கள் திராவிட மாடல்.


தமிழ் மைந்தன்
அக் 21, 2025 07:30

ஊழலுக்காகவே மக்கள் தேர்த்தெடுத்தது திமுக ஆட்சியைதான் மேலும் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் பெயரை மட்டும் மாற்றி அதற்கு ஒரு விழா எடுத்து அதற்கு ஒரு தொகையை ஆட்டையை போடுவது திராவிட ஊழல் மாடல் ஆட்சி


முக்கிய வீடியோ