உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  10 பஞ்சாயத்துகளில் மட்டும் வலம் வரும் அமைச்சர்!

 10 பஞ்சாயத்துகளில் மட்டும் வலம் வரும் அமைச்சர்!

மெ து வடையை கடித்தபடியே, ''ஐ.பி.எஸ்., அதிகாரியின் அதிருப்தியை கேளும் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திருப்பூரில் நடந்த, 'பாசி' நிதி நிறுவன ஊழல் வழக்கில், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பிரமோத்குமாரை, 2012ல், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செஞ்சா... பல வருஷங்களா நடந்த சட்ட போராட்டத்துல, பிரமோத்குமார் மீதான குற்றச்சாட்டை, மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரத்து பண்ணிடுத்து ஓய்... ''இதனால, மறுபடியும் டூட்டியில் சேர்ந்த வர், 2024ல், டி.ஜி.பி., யாகி, 2025 செப்டம்பரில், 'ரிட்டயர்' ஆகிட்டார்... இவருக்கும், கடந்த ஜன., 30ல் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அபய்குமார் சிங் ஆகியோருக்கும், தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத்தினர், ரெண்டு நாளைக்கு முன்னாடி, பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தா ஓய்... ''ஆனா, 'ஊழல் வழக்கில் சிக்கிய பிரமோத்குமாருக்கும், 30 வருஷங்களுக்கு மேலா எந்த குற்றச்சாட்டுலயும் சிக்காத எனக்கும், ஒரே நேரத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சியா'ன்னு அபய்குமார் சிங் அதிருப்தியில இருந்திருக்கார்... இதை கேள்விப்பட்ட பிரமோத்குமார், அந்த நிகழ்ச்சிக்கு வராம ஒதுங்கிட்டார்... இதனால, அபய்குமார் சிங்கிற்கு மட்டும் பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்துது ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''ஆண்டாள் தொகுதிக்கு கடும் போட்டி நடக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில், பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் இருக்குல்லா... இங்கே, பல முறை, அ.தி.மு.க., தான் ஜெயிச்சிருக்கு வே... ''இதனால, அந்த கட்சியில் நிறைய பேர் இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வமா இருக்காவ... அதே நேரம், தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூ., கட்சியினரும், கடந்த முறை போட்டியிட்டு தோத்து போன காங்கிரசும், இவங்களுக்கு போட்டியா வி.சி., கட்சியும் இந்த தொகுதியில போட்டி யிட ஆசைப்ப டுதாவ... அதே நேரம், தி.மு.க.,வினரோ, 'இந்த முறை நாமே இங்க போட்டியிடலாம்'னு தலைமைக்கு தகவல் அனுப்பிட்டு இருக்காவ வே..'' என்றார், அண்ணாச்சி. ''என்கிட்டயும் தேர்தல் சம்பந்தமா ஒரு தகவல் இருக்குது பா... '' என்றார், அன்வர்பாய். ''சீக்கிரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''தமிழக சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சென்னை, ஆலந்துார் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காரு... காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சரும் இவர் தான் பா... ''காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கெருகம்பாக்கம், மவுலிவாக்கம், கொளப்பாக்கம், கோவூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகள், இவரது ஆலந்துார் தொகுதிக்குள்ள வருது... கடந்த அஞ்சு வருஷமா நடந்த கிராம சபை கூட்டங்கள்ல, 95 சதவீதம் கூட்டங்களை, இந்த, 10 ஊராட்சிகள்ல மட்டுமே அன்பரசன் நடத்தி, அந்த மக்களிடம் குறை களை கேட்டு நிவர்த்தி பண்ணியிருக்காரு பா... ''மாவட்டத்தின் மற்ற பகுதிகள்ல நடந்த கிராம சபை கூட்டங்களை எட்டிக்கூட பார்த்தது இல்ல... இப்ப தேர்தல் வர்றதால, இந்த, 10 ஊராட்சிகள்லயும் தான் அமைச்சர் அடிக்கடி வலம் வர்றாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய். ''தனக்கு சாதகமான ஓட்டு, இந்த பகுதிகள்ல தான் அதிகமா விழறதுன்னு நினைக்கிறாரோ, என்னவோ...''என்றபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vee srikanth
பிப் 02, 2026 18:26

சிறு குறு தொழில் அமைச்சர் தொகுதி - பல்லாவரம் - குன்றத்தூர் - திருமுடிவாக்கம் - பகுதி சாலைகள் படு மோசம் - அவருக்கு தெரியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை