''மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் பாழா போறது பாருங்கோ...'' என, அலுத்தபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''என்ன, ஏதுன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பெரம்பலுார் மாவட்டம், சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தர், 'வெப்சா' என்ற பெயர்ல, விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 60 லட்சம் ரூபாய், கால்நடை தீவன உற்பத்தி நிலையம் அமைக்க 20 லட்சம் ரூபாய்னு, மொத்தம் 80 லட்சம் ரூபாயை வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையிடம் மானியமா வாங்கியிருக்கார் ஓய்...''ஆனா, இவர் விவசாயியும் இல்ல... மேற்கண்ட தொழிற்சாலைகள் அமைக்கறதுக்கான எந்த தகுதியும் இல்லாதவர்... இதனால, எந்த தொழிற்சாலையையும் அவர் அமைக்கல ஓய்...''துறையின் மாநில அதிகாரி சிபாரிசுல தான், இவருக்கு, 80 லட்சத்தை சுளையா துாக்கி குடுத்திருக்கா... மாவட்ட அதிகாரிகளும், இவரிடம், 'கட்டிங்' வாங்கிண்டு, உடந்தையா இருந்திருக்கா ஓய்...''ரெண்டு மானியத்தையும் வாங்கிண்டு, மூணாவதா ஒரு மானியத்துக்கு இவர் வந்தப்பதான், பழைய மோசடி தெரியவந்துது... இது சம்பந்தமா இப்ப விசாரணை நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.''மணிவாசன் தள்ளி உட்காரும்...'' என்ற அன்வர்பாயே, ''திட்டமிட்டுதான் வந்திருக்காரு பா...'' என்றார்.''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரையில் சமீபத்துல நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்துல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துக்கிட்டாரே... கூட்டத்துக்கு வந்த பத்திரிகையாளர்களிடம், கட்சியின் மாநில பொதுச்செயலர் ராம ஸ்ரீனிவாசன், 'அமித் ஷாவிற்கு நினைவுப்பரிசு கொடுப்போம்... அதை படம் எடுத்துட்டு நீங்க கிளம்பிடலாம்'னு சொன்னாரு பா...''இதை கவனிச்ச அமித் ஷா, ஸ்ரீனிவாசனிடம், 'வேண்டாம்... அவங்க இருக்கட்டும்'னு சைகையில சொல்லிட்டு, பத்திரிகையாளர்களை பார்த்து, 'நீங்க இருங்க'ன்னும் சைகை காட்டினாரு பா...''அப்புறமா அமித் ஷா பேசுறப்ப, மத்திய அரசின் சாதனைகளை விளக்கியதோட, தி.மு.க., அரசையும் கடுமையா விமர்சனம் செஞ்சாரு... இதெல்லாம் முழுமையா மக்களிடம் போய் சேரணும்னு தான், பத்திரிகையாளர்களை உட்கார சொல்லியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''கோவில் பணத்தை கொள்ளை அடிச்சவரை சும்மா விட்டுட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை தழுவக்கொழுந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுல, வளையங்கரனை சீனிவாச பெருமாள், ஒரத்துார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய உபகோவில்கள் இருக்கு... இந்த கோவில்களுக்கு உண்டியல் வசூல், வாடகை, குத்தகைன்னு நிறைய வருமானம் வருது வே...''இந்த கோவில்களின் டிபாசிட் பணம் 50 லட்சத்தை, தற்காலிக ஊழியர் ஒருத்தர் போலி கையெழுத்து போட்டு எடுத்துட்டாரு... இந்த மோசடியை அதிகாரிகள் கண்டுபிடிச்சதும், அவர் வேலைக்கு வர்றதை நிறுத்திட்டாரு வே...''அவர் மீது போலீஸ்ல புகார் குடுத்து ஏன் நடவடிக்கை எடுக்கலன்னு கேட்டா, 'எடுத்த பணத்தை திருப்பி தந்துடுறதா அவர் சொல்லியிருக்கிறதால, புகார் பண்ணல'ன்னு அதிகாரிகள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.கடைக்கு வந்த இளைஞரிடம், ''ஹரிகிருஷ்ணன், காலேஜ் எப்ப திறக்குது பா...'' என, அன்வர்பாய் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.