உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / உதவியாளர் தாளத்துக்கு ஆடும் பதிவாளர் அலுவலகம்!

உதவியாளர் தாளத்துக்கு ஆடும் பதிவாளர் அலுவலகம்!

“அரசியல்வாதிகளுக்கே அல்வா குடுத்துட்டா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி. “தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்கள்ல, 48 உதவியாளர் பணியிடங்களுக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் மூலமா போன வருஷம் பணி நியமனம் நடந்துது... இதுக்காக, கூட்டுறவு அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி பிரமுகர்கள், சிபாரிசு பட்டியலை நீட்டியிருக்கா ஓய்...“அதை வாங்க மறுத்த அதிகாரிகள், 'இந்த நியமனங்கள் எல்லாம், முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டுல நடக்கறது'ன்னு சொல்லவே, ஆளுங்கட்சியினரும் சத்தம் காட்டாம போயிட்டா...“ஆனா, ஆளுங்கட்சியினரை ஓரங்கட்டிய அதிகாரிகள், தங்களது தம்பி, தங்கை, சித்தி மகள், அண்ணன் மகன், ஓய்வு பெற்ற அதிகாரியின் மகள்னு பத்துக்கும் மேற்பட்டவாளை, சங்க விதிகளை மீறி முறைகேடா பணியில சேர்த்துட்டா ஓய்...“இது போக, தேனி மாவட்ட ரேஷன் கடைகள்ல, 41 விற்பனையாளர்கள், எட்டு எடையாளர் பணியிடங்களுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி நேர்முகத் தேர்வு நடந்துது... இதுக்கும், அதிகாரிகள், பலரிடமும் வசூல் பண்ணியிருக்கா... “இவாளுக்கு பணி நியமனம் லேட்டாறதால, பணம் குடுத்தவா, அதிகாரிகள் வீட்டுக்கு நடையா நடக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா. “பாதிரியார் அறைக்கு பெண் வந்துட்டு போனது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்குதுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...“துாத்துக்குடியில், கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் இல்லம் இருக்கு... இங்க ஒரு அறையில, மறைமாவட்ட தலைமை செயலரான ஒரு பாதிரியார் தங்கியிருக்காருங்க...“இந்த அறைக்கு அடிக்கடி ஒரு பெண் வந்து தங்கிட்டு போயிருக்காங்க... இதை பார்த்த சிலர், பாதிரியாரை எச்சரிக்கை பண்ணியும், அவர் கேட்கல... சமீபத்துல, அந்த பெண்ணுடன், பாதிரியார் நெருக்கமா இருந்ததை ஜன்னல் வழியா சிலர் வீடியோ எடுத்து, பிஷப்பிடம் முறையிட்டிருக்காங்க...“இந்த வீடியோ, உள்ளூர் சமூக வலைதளங்கள்ல பரவிடுச்சு... இதை சமாளிக்க, 'அந்த பெண் கடும் மன அழுத்தத்துல இருந்ததால, பாதிரியாரை பார்த்து மனம்விட்டு பேசிட்டு போனாங்க'ன்னு பாதிரியார் தரப்புல சொல்றாங்க...” என்றார், அந்தோணிசாமி.“ஜெகதீசன், இங்கன உட்காரும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “காசை வெட்டுனா தான் காரியம் நடக்கும் வே...” என்றார்.“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.“சென்னை, பீச் ஸ்டேஷன் பக்கத்துல வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம் இருக்கு... இங்க, இளநிலை உதவியாளர் ஒருத்தர் வைக்கிறது தான் சட்டமா இருக்கு வே...“இந்த மாவட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டுல, ஆறு சார் - பதிவாளர் அலுவலகங்கள் இருக்கு... இந்த ஆறு அலுவலகங்கள்ல இருந்தும், பொதுமக்கள் கேட்கிற வில்லங்க சான்றி தழ்களுக்கு எல்லாம் பணம் குடுத்தா தான் காரியம் நடக்கும் வே...“பணம் தராதவங்களை, 'இன்று போய் நாளை வா' கணக்கா அலைய விடுதாவ... திருவள்ளூர் மாவட்ட பெண் பதிவாளர் தான், வடசென்னை மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பா இருக்காங்க வே...“இவங்க, திருவள்ளூர் ஒருநாள், வடசென்னை ஒருநாள்னு மட்டுமே வந்துட்டு போறாங்க... இதனால, வடசென்னையில உதவியாளர் தான் சகலகலா வல்லவரா இருந்து, வசூலை வாரி குவிக்காரு வே...” என முடித்தார், அண்ணாச்சி.“சரவணன்.. இப்படி வாங்க, முக்கிய விஷயம்...” என, நண்பரை அழைத்து அந்தோணிசாமி பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூன் 03, 2025 00:31

அந்த பெண் கடும் மன அழுத்தத்துல இருந்ததால், கூட்டத்தை பார்த்தால் பயம். அப்பப்ப பாதிரியாரை தனியாக பார்த்து மனம்விட்டு சிரித்து பேசிட்டு போவாங்க போலும். அது அவளுக்கு டானிக் குடித்தது போல் இருந்திருக்கும்.