ஆபத்தான ரசாயனங்களை அழிக்க அற்புத வழி
அறிவியல் உலகில் நாம் சில பொருட்களை அவற்றில் காணப்படும் சில தனித்துவமான தன்மைகளுக்காகப் பயன்படுத்துவோம். ஆனால், சில நேரங்களில் இவற்றின் சிறப்பம்சங்களே வேறு பிரச்னைகளுக்குக் காரணமாகி விடும். அப்படியான ஒன்று தான் பெர்- மற்றும் பாலிபுளோரோ ஆல்கைல் பொருட்கள் (PFAS - Per- and polyfluoro alkyl substances). இந்த வேதிப் பொருட்கள் தண்ணீர், வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாதவை, சிதையாதவை. அதற்குக் காரணம் இவற்றில் உள்ள கார்பன் - ப்ளூரின் இணைப்பு தான். அதனால் தான் இவற்றை நான்-ஸ்டிக் பாத்திரங்கள் முதல் தண்ணீர் ஒட்டாத துணிகள் வரை பல தரப்பட்ட பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை பயன்பாட்டிற்குப் பின் கைவிடப்படும்போது மண்ணில் மட்குவதில்லை. சுற்றுச்சூழலில் சிதையாமல் இருப்பதால், பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகின்றன. இவை மனித உடலுக்குள் நுழையும்போது நீரிழிவு, நோயெதிர்ப்பு மண்டல பாதிப்பு, பல்வகை புற்று நோய்களை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை உரிய முறையில் மட்கவைக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.தற்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரிட்சுமெய்கென் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கொரு சிறந்த தீர்வைக் கண்டுள்ளனர். தாமிரம் பூசப்பட்ட காட்மியம் சல்பைடின் குறைக்கடத்தி நானோ படிகங்களைத் தண்ணீர், ட்ரைத்தனோலமைன் கலந்த கரைசலில் சேர்த்தனர். இவற்றுடன் பி.எஃப்.ஏ.எஸ்., ரசாயனங்கள் (PFAS chemicals) கலந்தனர். கரைசல் மீது 405 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட எல்.இ.டி. ஒளியைச் செலுத்தினர். ஒளியிலிருந்து ஆற்றல்பெற்ற நானோ படிகங்கள் மீது பி.எஃப்.ஏ.எஸ்., மூலக்கூறுகள் ஒட்டிக்கொண்டன. இந்த செயல்பாட்டின்போது உருவான எலெக்ட்ரான்கள் மூலக்கூறுகளிலிருந்து ப்ளூரின் அயனிகளைத் தனியே பிரித்தெடுத்தன. இதனால் பி.எஃப்.ஏ.எஸ்., ரசாயனங்கள் 38 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 24 மணிநேரங்களில் 100 சதவீதம் சிதைவுற்றன. இந்த முறையில் பிரித்தெடுக்கப்பட்ட ப்ளூரின் அயனிகளை வேறு வகைகளில் மறுபயன்பாடு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. இதற்கு முன்பு பயன்படுத்திய முறைகளில் மிக அதிகமான வெப்பமும், புற ஊதாக்கதிர்களும் தேவைப்பட்டன. இந்தப் புதுமுறையில் இவை தேவையில்லை.