சிமென்டுக்கு மாற்று
இன்றைய தேதியில் முக்கியமான கட்டுமானப் பொருளாக இருப்பது, கான்கிரீட் தான். கான்கிரீட் தயாரிப்பதற்கு சிமென்ட் தேவை. சிமென்ட் உற்பத்தி மட்டுமே உலகின் மொத்த கார்பன் மாசுபாட்டில் 8 சதவீத பங்கு வகிக்கிறது. ஆகவே, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றால் சிமென்டுக்கு மாற்றான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படித் தான் எரிமலைகளிலிருந்து கிடைக்கும் சாம்பலை பயன்படுத்துகின்ற வழக்கம் வந்தது. ஆனால், இது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக அனல் மின் நிலையங்களில் வீணாக்கப்படும் கரியிலிருந்து கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலை அனல் மின் நிலையத்திலிருந்து கரி சாம்பலை எடுத்துக் கொண்டு, அதனுடன் 18 சதவீதம் சுண்ணாம்பையும் 3 சதவீதம் நானோ சிலிகாவையும் கலந்தனர். இந்தக் கலவையை கான்கிரீட்டுடன் சேர்த்துப் பயன்படுத்தி பார்த்தனர். இந்த கான்கிரீட், வழக்கமாக போர்ட்லாந்து சிமென்ட் பயன்படுத்தப்பட்டு செய்யப்படும் கான்கிரீட்டை விட அதிக வலிமையோடு இருந்தது. சல்பேட், அமிலங்கள் ஆகியவற்றால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. எனவே வழக்கமான சிமென்டிற்குப் பதிலாக இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.