குளிரூட்டும் கண்ணாடி
வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்களில் நல்ல வெளிச்சம் கிடைப்பதற்கு, செங்கல் சுவர்களுக்குப் பதிலாக கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிக்கல் என்னவென்றால் இவை வெளிச்சத்துடன் வெப்பத்தையும் சேர்ந்து உள்ளே கொண்டு வருகின்றன. இதற்கு தீர்வு காண, PMMM எனும் புதிய பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதை, ஒரு படலம் போல சாதாரண கண்ணாடி மீது ஒட்டினால் போதும்; வெளியிலிருந்து யாரும் உள்ளே இருப்பவற்றை பார்க்க முடியாது. சாதாரண கண்ணாடியின் ஒளி புகும் தன்மை 91 சதவீதம். ஆனால், இந்தப் படலத்தை ஒட்டினால் அது 95 சதவீதமாக அதிகரித்துவிடும். இந்தப் படலம் நுண்ணிய பிரமிட் வடிவங்களால் ஆனது என்பதால் தான் அதிகமான ஒளியை அனுமதிக்கின்றன. இதன் அமைப்பு, வெளியில் உள்ள வெப்பத்தை உள்ளே அனுமதிக்காது. இதனால், அறையின் வெப்பநிலை வெளியில் உள்ளதை விட 6 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும். சாய்வான பிரமிடு வடிவத்தில் துாசுகள் ஒட்டாது என்பதால், இவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய தேவை இல்லை. ஆகவே, இவற்றை பயன்படுத்துவதால் குளிரூட்டிகள், மின்விளக்குகளின் தேவை குறையும்.