உள்ளூர் செய்திகள்

ஆக்கபூர்வமான பனிப்பாறைகள்

துருவக் கடல்களில் மிதந்து செல்லும் பனிப்பாறைகள், ஒரு பகுதியை வெறுமனே கடந்து செல்வதில்லை என்கிறது, நேச்சர் ஜியோசயன்ஸ் இதழில் வெளியான ஓர் ஆய்வு. பெரும் மலைத் தீவு போன்ற பனிப் பாறைகள் கடலடிப்பகுதியை உரசிச் செல்கையில், சுற்றியுள்ள நீரில் ஊட்டச்சத்துகளை வெளியிடுகின்றன. இதனால், பூமியின் மிகத் தொலைதுாரப் பகுதிகளில் உள்ள ஆழ்கடல் சூழலையே முழுமையாக மாற்றி, கடல் உயிரினங்கள் செழிக்கும் மையங்களை உருவாக்குகின்றன. மிதந்து செல்லும் பனிப்பாறைகள், கடலடி வாழ்விடங்களைச் சிதைக்கின்றன. என்றாலும், மறு புறம் உயிரியல் செயல்பாடுகளைத் துாண்டும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. அவை கடந்து சென்ற குளிர்ந்த, இருண்ட ஆழ்கடல் பாதையில், எதிர்பாராத அளவுக்குப் பவளப்பாறைகள், கடற்பஞ்சுகள் மற்றும் பிற உயிரினங்கள் செழித்து வளர்வதை ஆய்வாளர்கள் கவனித்தனர். இந்தப் பிரமாண்ட பனிக்கட்டிகள் சில வாழ்விடங்களை அழித்தாலும், புதிய உயிர்கள் தழைக்க வழியமைத்து, 'ஆக்கல், அழித்தல்' என இரண்டையும் ஒரே நேரத்தில் செய்கின்றன. பருவநிலை மாற்றத்தால், பனிப்பாறைகளின் நகர்வுகள் அதிகரித்து வரும் இக்காலத்தில், துருவக் கடல்களில் அவற்றின் சிக்கலான பங்கை இந்த ஆய்வு உணர்த்துகிறது. பனிப்பாறைகள் வெறும் உயிரற்ற உறைந்த நீர்க்கட்டிகள் அல்ல. கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் உலகங்களை வடிவமைக்கும் ஆற்றல்மிக்க, 'சூழியல் கட்டடக் கலைஞர்கள்' என்பதை இது காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !