இதய ஆரோக்கியம் காக்கும் ப்ளேவனால்
விதைகள், கோக்கோ, க்ரீன் டீ, சில வகை பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள ஒரு முக்கியமான சத்து ப்ளேவனால் (Flavonols). இதனால், நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நிறைய ஆய்வுகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த பர்மிங்காம் பல்கலை சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ப்ளேவனால் இதய ஆரோக்கியம் காப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக விஞ்ஞானிகள் ஆரோக்கியமான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு வெண்ணெய், சீஸ், பால் முதலிய கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தந்தனர். பிறகு அவர்களை இரு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவுக்கு ப்ளேவனால் அதிகமுள்ள பானத்தையும், மற்றொரு குழுவுக்கு ப்ளேவனால் குறைவாக உள்ள பானத்தையும் தந்தனர். இரு குழுவினரையும் சில கணிதப் புதிர்களைத் தீர்க்கச் சொன்னார்கள்.இதன்மூலம் நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தின்போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் இரண்டையும் செயற்கையாக அவர்களுக்கு உருவாக்கினர். இதற்குப் பிறகு இரு குழுவினரின் இதயச் செயல்பாடு, ரத்த அழுத்தம் இரண்டையும் சோதித்தனர். இதில் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் ப்ளேவனால் அதிகமுள்ள பானத்தை அருந்தினரோ அவர்களின் இதயச் செயல்பாடு அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. பொதுவாக அதிகக் கொழுப்புள்ள உணவுகள், மன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் இதயச் செயல்பாட்டைப் பாதிக்கும். ஆனால், இந்த ஆய்வின் மூலம் இப்படியான உணவுகள் சாப்பிடும்போது ப்ளேவனாலை அதிகமாக உட்கொண்டால் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 400 - 600 மில்லிகிராம் ப்ளேவனாலை எடுத்துக் கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.