உள்ளூர் செய்திகள்

உரத்தால் உயரும் உஷ்ணம்

பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயு தான் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்துகிறது என்று எண்ணுகிறோம். ஆனால், இதை விட 300 மடங்கு மோசமானது நைட்ரஸ் ஆக்ஸைட். சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஸிரோ (CSIRO) விஞ்ஞான மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஓசோன் படலத்தை அரிக்கிறது. இந்த ஆபத்தான வாயு நம் வளிமண்டலத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. 1980களில் இருந்ததை விட தற்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.விவசாயத்தில் புரட்சி என்று கருதப்பட்டது நைட்ரஜன் உரங்களின் அறிமுகம். பயிர்கள் செழித்து வளர்வதற்கு நைட்ரஜன் அவசியம். பயறு வகை தாவரங்களில் இயற்கையாக நுண்ணுயிர்கள் நைட்ரஜனைச் சேமிக்கும். இதைப் பார்த்தே நைட்ரஜன் உரங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உணவு உற்பத்தி பெருகியது. ஆனால், இந்த உரங்களால் வளிமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்ஸைட் பெருகுகிறது. இந்த மாசுபாட்டில் முன்னணியில் இருப்பவை சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தான். அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் இருந்தன. தற்போது அவை உமிழ்வைக் குறைத்துக் கொண்டன.உலகின் மொத்த நைட்ரஸ் ஆக்ஸைட் உமிழ்வில் நைட்ரஜன் உரங்கள், விலங்குக் கழிவு உரங்கள் ஆகியவை சேர்ந்து ஏற்படும் உமிழ்வு 74 சதவீதம். இது தவிர கழிவுநீர், தொழிற்சாலைகள், புதைபடிவ எரிபொருட்கள் ஆகியவை காரணிகள் ஆகின்றன. உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இந்த வாயு உமிழ்வை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !