அல்சைமருக்கு அடிபோடும் மேக்னிடைடு
சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் காற்று மாசினால் மார்பக புற்றுநோய், இதய கோளாறுகள் ஏற்படும் என, ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.சமீபத்திய ஆய்வு ஒன்று, மூளை தொடர்பான நினைவாற்றல் குறைபாடு நோயான 'அல்சைமர்' நோய்க்கும், காற்று மாசுபாட்டிற்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்துள்ளது. பொதுவாகவே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்கிறவர்களுக்குத் தான் 'அல்சைமர்' வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, மேக்னிடைடு (Magnetite) எனும் நச்சு, 'அல்சைமர்' நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அதிகளவில் காணப்பட்டது. இயற்கையாகவே மனித மூளையில் உள்ள இரும்புச்சத்து மேக்னிடைட் ஆக மாற்றம் அடையும்.வாகனப் புகை, மரக்கட்டைகளை எரிப்பதனால் வரும் புகை, நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வரும் புகை ஆகியவற்றில் மேக்னிடைட் அதிகமாக இருக்கிறது. நாம் சுவாசிக்கும் போது இது மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து மூச்சுக் குழாயைக் கடந்து மூளையை அடைகிறது. மூளையில் உள்ள நியூரான்களை இது கடுமையாகப் பாதிக்கிறது.இது தொடர்பாக விஞ்ஞானிகள், எலிகளை வைத்துச் சோதனை செய்தனர். இரும்பு, டீசல், மேக்னிடைடு ஆகிய மூன்று நச்சுகளால் மாசடைந்த காற்றை எலிகள் சுவாசிக்கத் தந்தனர். வெகு விரைவிலேயே மேக்னிடைடு கலந்த காற்றைச் சுவாசித்த எலிகளுக்கு மூளை நியூரான்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அவை நினைவாற்றலை இழந்தன. இந்த ஆய்வின் மூலம் மேக்னிடைடினால் ஏற்படும் ஆபத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, இது உற்பத்தியாகும் இடங்களில் இருந்து காற்றில் கலக்காதபடி பிரித்து எடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.