உள்ளூர் செய்திகள்

தீயவைக்கு மட்டும் தீங்கு செய்யும் மருந்து

அனைத்து பாக்டீரியாவும் நோய் ஏற்படுத்துபவை அல்ல. அவற்றுள் நம் உடலுக்குப் பல வகைகளிலும் நன்மை செய்கின்றவையும் உள்ளன. ஆன்டிபயாடிக் மருந்துகள் தீய பாக்டீரியாவை அழிக்கத் தான் தயாரிக்கப்படுகின்றன. என்றாலும் கூட, அவை சில நேரங்களில் நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. இதனால், நம் உடலுக்குப் புதிய பிரச்னைகள் வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய் பல்கலை தீய பாக்டீரியாவை மட்டும் அழித்து, நல்ல பாக்டீரியாவைத் தாக்காத அடுத்தத் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்தை உருவாக்கி உள்ளனர்.பொதுவாக பாக்டீரியா இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கிராம் பாசிடிவ் பாக்டீரியாவில் உடலைச் சுற்றியுள்ள வெளிப் படலம் இருக்காது. ஆனால் கிராம் நெகடிவ் பாக்டீரியாவில் உள்ளே, வெளியே என இரு படலங்கள் உடலைச் சுற்றி இருக்கும். இதனால் இவற்றைக் கொல்வது கடினமாகிறது. பெரும்பாலான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிராம் பாசிடிவ் பாக்டீரியாவையே கொல்கின்றன. கிராம் நெகடிவ் பாக்டீரியாவைக் கொல்ல வெகுசில ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே உள்ளன.நம் குடலில் உள்ளவை பெரும்பான்மை கிராம் நெகடிவ் பாக்டீரியாவே. அவற்றில் ஈ கோலை, கே நிமோனியா உள்ளிட்ட பாக்டீரியா சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இவற்றைக் கொல்லக்கூடிய லோலாமிசின் (Lolamicin) எனும் ஆன்டிபயாடிக் மருந்தை விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர். ஆய்வுக்கூடத்தில் சோதித்துப் பார்த்தபோது, இந்தப் புது மருந்து மேற்குறித்த பாக்டீரியாவில் 90 சதவீதத்தைக் கொன்றது. எலிகளின் மீது சோதித்ததிலும் வெற்றி கிட்டியது. இந்த மருந்து மேலும் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !