இரவு ஒளி நீரிழிவுக்கு வழி
வகை 2 நீரிழிவு நோய் ஏற்பட வாழ்வியல் முறை, உணவு, மரபியல் எனப் பல காரணங்கள் உள்ளன. இரவு நேரங்களில் அதிக ஒளியில் இருப்பதும் ஒரு முக்கியக் காரணி என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிளின்டர்ஸ் பல்கலை கண்டறிந்துள்ளது. 85,000 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.வௌவால் போன்ற சில உயிரினங்கள் பகலில் உறங்கும், இரவில் சுறுசுறுப்பாகத் தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும். மனிதர்களாகிய நாம் இரவில் துாங்கி பகல் வெளிச்சத்தில் இயங்குபவர்கள். எனவே அதற்கு ஏற்றார் போல் தான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும். இதையே சர்க்காடியன் ரிதம் / சுழற்சி என்று கூறுகிறோம். இரவில் அதிக நேரம் டிஜிட்டல், பிற செயற்கை மின் ஒளிகள் மிகுந்த சூழலில் நீண்ட நேரம் பணி செய்யும்போது இந்தச் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பு குறைகிறது. சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. குறிப்பாக 12.30 முதல் 6 மணி வரை இரவு நேரம் பணி செய்பவர்களுக்கு மற்றவர்களை விட வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 67 சதவீதம் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.