உள்ளூர் செய்திகள்

ஆறு தலைமுறையாக கம்பு சுற்றும் குடும்பம்

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை ஆறு தலைமுறை களாக ராமநாதபுரம் சிலம்ப வாத்தியாரின் குடும்பம் கட்டிக் காத்து வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு சிலம்பம், கட்டைக்கால் ஆட்டம், மரக்கால் ஆட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், பொய்க்கால் குதிரை, சுருள்வாள், தீப்பந்தம் போன்ற கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார் ராமநாதபுரம் சிலம்ப வாத்தியார் லோகசுப்பிரமணியன் 46. இவர் 6 வயதில் சிலம்பம் கற்று தேர்ந்தவர். இதுவரை 2000 மாணவர்கள், 400 மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுத் தந்துள்ளார். ராமநாதபுரம் ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலராக பணிபுரிகிறார். இவரது மாணவர் சர்தார் நைனா முகமது சிலம்ப ஆசிரியராக மலேசியாவில் பணிபுரிகிறார். இவருக்கு 2004ல் தமிழக அரசின் கலை வளர்மணி விருது கிடைத்துள்ளது.டில்லியில் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் சிலம்பாட்டம் நடத்தியுள்ளார். லோகசுப்பிரமணியன் கூறியதாவது:சிலம்பம், மரக்கால் ஆட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, மாடு ஆட்டம் சுருள்வாள், தீப்பந்தம் விளையாட்டுகள் பாரம்பரியமாக எனது குடும்பத்தினரிடம் இருந்து வந்தது. நான் ஆறாவது தலைமுறை. 7வது தலைமுறையாக எனது மகன் ஆகாஷ், மாணவி ஹாரிணி ஆகியோர் 13 வயதில் 6.5 அடி உயர மரக்கால் ஆட்டம் ஆடி சாதனை படைத்துள்ளனர்.சிலம்பம் தற்காப்பு கலையாக இருந்தாலும், தமிழகத்தில் தனி மதிப்பு பெற்று இருந்தது. சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் சிலம்பம் கற்றதற்கான சான்று வழங்கினால் அதனை அங்கீகரித்து படையில் சேர்த்துக் கொண்டார். அப்போது சிலம்ப கம்புடன் செல்வதற்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்தனர். பின் சிலம்பாட்டத்தின் மவுசு படிப்படியாக குறைந்தது. 1985ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மாநில அளவிலான சிலம்ப ட்டிகளை நடத்தி புத்துயிர் ஊட்டினார். அதன் பின்பு தமிழகத்தில் பரவலாக சிலம்பாட்ட கலை வளர்ந்தது. இன்று போலீஸ் தேர்வில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் சிலம்பத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளில் கிராமங்களில் இன்றும் இது போன்ற பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வரவேற்கத்தக்கது. காலங்கள் மாறலாம். நவீன மயமாகலாம். பாராம்பரிய கலைகள் என்றும் மாறுவதில்லை. நம்முடன் தொடர்ந்து வருகிறது, என்றார். இவரை பாராட்ட 98425 67308. கதிர், கபினிஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்