கோயில் நகருக்குள் ஒரு கோட்டை கொத்தளம்...
விரைந்து ஓடும் வாகனங்கள், பரபரப்பாய் நடக்கும் பாதசாரிகள், மணம் வீசும் பூக்கடைகள், ஒய்யார ஓட்டல்கள், பயணிகளுடன் பறக்கும் பேருந்துகள்... என எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருக்கும் மதுரையின் மையப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம் அருகே நிலைத்து நிற்கும் கோட்டையின் 'கேட்'டை கடந்து போகும் நாம் அதன் வரலாற்றை திரும்பி பார்த்தது உண்டா, விரும்பி படித்தது உண்டா...தமிழகத்தில் உள்ள 92 சங்க கால, 8 சிற்றரசர், 18 பாளைய, 65 சேதுநாட்டு கோட்டைகளில் பல இன்றும் இரும்பென இறுகி கிடக்கிறது. இந்த வரிசையில் மதுரையின் மிஞ்சியுள்ள ஒரே கோட்டை என்ற பட்டத்துடன் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது மேற்கு நுழைவாயில் கோட்டை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஆவணி மூல வீதிகளில் கோட்டை சுவரும், நேதாஜி ரோட்டில் பெரிய அகழியும் இருந்துள்ளது. அகழி இருந்த பகுதி 'பாண்டியன் அகழி கிடங்கு தெரு'வாக பெயர் பெற்றது. 1530ம் ஆண்டு நாயக்கர் காலத்தில் 72 கொத்தளங்களுடன் கட்டி கோட்டையின் மிஞ்சிய ஒரு கொத்தளம் தான் இன்றும் மதுரையின் மையத்தில் மையம் கொண்டுள்ளது.கோட்டை கதவு திறந்து வரலாற்றின் வாசல் கடந்து மதுரை தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் அழைத்துச் செல்கிறார்... எங்களோடு நீங்களும் பயணியுங்கள்... ''மதுரையை சுற்றி 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டு ஒரு பாளையத்திற்கும் ஒரு கொத்தளம் கட்டப்பட்டது. ஒரு கொத்தளத்திற்கு ஒரு பாளையக்காரர் வீதம் 72 பாளையக்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மக்களிடம் வசூலித்த வரியில் ஒரு பங்கு சுயசெலவிற்கு, இரண்டாம் பங்கு படைகளுக்கு, மூன்றாம் பங்கு அரசுக்கு என பகிர்ந்து கொள்வர்.கோட்டைக்கு கீழ், மேல் பகுதிகளில் வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்கள் வைப்பதற்கும் அறைகள் உள்ளன. கோட்டைக்கு மேலே பக்கவாட்டில் கீழே இறங்கும் படிகளை கடந்து சென்றால் வட்ட வடிவ அறை இருப்பதை பார்க்கலாம். (பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள் செல்ல அனுமதி இல்லை. தற்போது கோட்டையில் மாநகராட்சி அலுவலகம் செயல்படுகிறது)காலங்கள் மாறியது, மக்கள் தொகை பெருகியது, நாடு காக்கும் கோட்டையின் தேவையும் குறைந்தது... 1840ம் ஆண்டு மதுரை கலெக்டராக இருந்த பிளாக் பார்ன் நகரை விரிவாக்க, கோட்டை கொத்தளங்களை இடிக்க உத்தரவிட்டார். இடிக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்கலாம். இடித்த பகுதியை தாங்களே சொந்தமாக்கி கொள்ளலாம் என்றும் கூறினார்.அதற்கு பின் 71 கோட்டைகள் இடிக்கப்பட்டன. இந்த ஒரு கோட்டையை இடிப்பதில் மட்டும் எப்படியோ 'கோட்'டை விட்டு விட்டனர். இதே போல் இடிக்காமல் விடப்பட்ட கோட்டை பகுதி தான் இன்றைய 'விட்ட வாசல்'. விஜயநகர அரசர்கள் வழியில் வந்த வானாதிராயன் அழகர்கோயிலை சுற்றி கட்டிய கோட்டை சிறு சேதாரங்களுடன் இன்றும் இருக்கிறது. மதுரையில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்களை ஆராய்ந்தால் பல ஆச்சர்யங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்பதில் ஐயமில்லை''என, வியப்பின் விளிம்பில் நம்மை நிறுத்தி விட்டு விடை பெற்றார் சாந்தலிங்கம்....தொல்லியல் அறிய 98946 87358க்கு பேசலாம்.ஸ்ரீனி, கண்