அஜித்... விக்ரம்... விஷால் - பொங்கல் விருந்து ஜோர்!
பண்டிகை மகிழ்ச்சி இப்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வீடு சார்ந்தது. மற்றொன்று தியேட்டர் சார்ந்தது. பண்டிகையை கொண்டாடுகிறார்களோ இல்லையோ தியேட்டர் வாசலில் தங்கள் மனம் கவர்ந்த நாயகனை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. ரசிகர்களின் பொங்கல் விருந்ததாக மூன்று திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. * என்னை அறிந்தால்கடந்த பொங்கலில் வீரம் அடித்த ஹிட்டிற்கு பிறகு 'தல' களமிறங்கும் படம் என்னை அறிந்தால். அஜித்- இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன்- இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இணையும் முதல் படம். கருத்துவேறுபாடுகளால் பிரிந்த கவுதம்-ஹாரீஸ் இணைகிறார்கள். 'தல' ஜோடியாக அனுஷ்கா-திரிஷா.தவிர பார்வதி நாயர், விவேக், பேபி அங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு டன் மக்ரதூர். எடிட்டிங் ஆண்டனி. படத்தின் புரமோவாக வெளியாகி உலகளாவிய ஆதரவை பெற்ற 'அதாரு... அதாரு...' பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். படத்தின் தலைப்பிலிருந்து, பாடல்கள், டிரைலர் வரை உலக அளவில் பேச வைத்த படம் என்பதாலும், 'ஓப்பனிங் கிங்' அஜித் படம் என்பதால் 'என்னை அறிந்தால்' மீதான எதிர்பார்ப்பு அதிகம். சில காரணங்களால் ஜன.௨௯க்கு தள்ளி வைக்கப்பட்டாலும் பொங்கல் எதிர்பார்ப்பாகவே உள்ளது.* ஐகடந்த தீபாவளியில் ெவளியாக வேண்டிய இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படம், அடுத்தடுத்து கத்தி, லிங்கா என மாஸ் படங்களின் தியேட்டர் ஆக்கிரமிப்பால் வெளியாக தாமதமானது. ஏற்கனவே பாடல்கள், டிரைலர்கள் வெளியான நிலையில் இனியும் தாமதிப்பது சரியல்ல என முடிவு செய்து பொங்கலில் ரசிகர்கள் மனதை பொங்க வைக்க வருகிறது 'ஐ'. சீயான் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கர். இப்பிரமாண்ட படைப்புக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். ஷங்கர், சுபா எழுத்தில் ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சுரேஷ் கோபி, உபன் படேல், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்ரமிற்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் படம் என்பதால் அவரது ரசிகர்களுக்கு இப்பொங்கல் தித்திக்கும்.* ஆம்பளஒவ்வொரு பண்டிகைக்கும் தன் படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியோடு இருப்பவர் விஷால். பொங்கலில் இவரது 'ஆம்பள' ெவளியாகிறது. அரண்மனை ஹிட் அடித்த மகிழ்ச்சியில் சுந்தர் இயக்கியிருக்கும் படம். ஹன்சிகா, பிரபு, சந்தானம், வைபவ், ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளனர். ஹிப்ஆப் தமிழா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.ராமதாஸின் கதை, வெங்கட் ராகவன் எழுத்தில் வெளியாக இருக்கும் 'ஆம்பள' வழக்கமான சுந்தர் சி யின் காமெடி பார்முலா கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே இதே கூட்டணியில் உருவான 'மதகஜராஜா' படம் வெளியாகாத நிலையில் 'ஆம்பள' உடனே உருவாகி வெளியாகிறது. பொங்கல் ரேஸில் ஆம்பள ஆரோக்கியமாக பயணிக்கும் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.