உள்ளூர் செய்திகள்

யானை சிலை கோயில்

விநாயகரின் அவதாரமாக பார்க்கப்படும் யானைக்கு ஆன்மிகத்தில் தனி இடம் உண்டு. மதுரை ஒத்தக்கடை யானை மலை, சிவனின் திருவிளையாடல் நிகழ்வின் ஒன்றாக உயிர்பெற்று கரும்பு தின்ற மீனாட்சி கோயில் கல் யானை, யானை சிலையால் யானைக்கல் என பெயர் பெற்ற சிம்மக்கல் வைகை ஆற்றின் கல் பாலப்பகுதி என மதுரைக்கும் யானைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.பிறந்த வீடான காடுகளை விட்டு புகுந்த வீடான நாட்டிற்கு வந்து நம்மோடு பழகி பாசம் காட்டும் யானைகளை போற்றும் விதமாக மதுரை அலங்காநல்லுார் ரோடு பாசிங்காபுரத்தில் யானை முக சிலைகளுடன் கூடிய ஆதிமூல வலம்புரி வல்லபி விநாயகர் கோயில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம்... பழமையின் பெருமையை தாங்கி நிற்கும் கோயிலில் ஆன்மிகமும், அமைதியும் தவழ்ந்தபடி நம்மை வரவேற்றது.கோயில் உறுப்பினர் கதிர்வேல் நம்மிடம் பேசினார்... ''60 ஆண்டுகளுக்கு முன் தாத்தா ஆதிமூலம் இக்கோயிலை கட்டினார். தாத்தாவுக்கு யானைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் யானையை பார்க்க விரும்பினார். இதற்காக யானை இருக்கும் கோயிலை தேடி செல்ல முடியாது என்பதால் இந்த கோயின் மதில் சுவரில் யானை முக சிலைகளை மாட்டி வைத்தார். தாத்தா ஜீவ சமாதியான பின் யானை சிலைகள் உள்ள பகுதியில் அவருக்கு கோயில் எழுப்பினோம்.திறந்தவெளியில் இருக்கும் சிலைகள் வெயில், மழை என காலநிலைகளை தாங்கி இன்றும் புதுமையாக காட்சிஅளிக்கிறது. நிஜ யானையின் முகம் போல் இருப்பதால் கோயிலுக்கு வரும் பெரியோர்கள், குழந்தைகள் வியந்து பார்க்கிறார்கள். தாத்தா வைத்த சிலைகளை நாங்கள் தொடர்ந்து பராமரிக்கிறோம். மீனாட்சி அம்மன் கோயிலில் இருப்பதை போல் இங்கும் வலம்புரி விநாயகர் இருப்பது கூடுதல் சிறப்பு.அரசு, வேம்பு ஒன்றோடு ஒன்றாக இணைந்து வளர்ந்த மரத்தடியில் உள்ள நாகர் விரும்பும் வரும் தருகிறார். இதே போல் தட்சிணா மூர்த்தி இங்கு அருள்பாலிக்கிறார். பழமையின் பெருமையை போற்றி பாதுகாக்க எங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு இறைவன் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்'' என யானை முக சிலைகளின் பின்னணியை எடுத்துரைத்து பொங்கல் வாழ்த்துக்களுடன் நம்மை வழியனுப்பினார் கதிர்வேல்... நீங்களும் பார்க்க 78716 54255க்கு பேசலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்