இது முரட்டுக்காளை - எச். ராஜாவின் பொங்கல்
அரசியல் களத்தில் அனைவருக்கும் அறிமுகமானவர், பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா. அரசியல் பணிகளுக்கு மத்தியில் இயற்கை வேளாண்மையில் அதிக ஈடுபாடு உடையவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சொந்த ஊர் காரைக்குடியில் இருக்கும் நாட்களில், தன் பண்ணையில் விவசாய பணிகளை மேற்கொள்வதுடன், கால்நடைகள் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.இவரது பண்ணையில் நாற்பதுக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. கன்றுகளுடன் பசுக்களை பராமரிப்பதிலும், பால் கறப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். பண்ணை தோட்டத்தில் இல்லாத மரவகைகளே இல்லை. பொங்கலை காரைக்குடி வீட்டில் கொண்டாடுவதுடன், மாட்டுப் பொங்கலை பண்ணையில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.கட்சியின் தேசிய செயலாளர், கேரள மாநில மேலிட பொறுப்பாளர் என பல்வேறு பதவிகள் வகித்தாலும் கூட, இயற்கை வேளாண்மை மீதான ஈடுபாட்டை விடவில்லை. பொங்கலை கொண்டாட தயாராகி கொண்டிருந்தவர் தினமலர் நாளிதழுக்காக மனம் திறந்ததாவது...பண்பாடு, பாரம்பரியத்திற்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. நம் நாடே விவசாய நாடு. 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை. பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பண்ணைக்கு வருவதை, இளைப்பாறி விட்டு செல்வது போல உணருவேன்.மா, தென்னை, பலா, கரிபலா, வாழை, கொய்யா, சப்போட்டா, மாதுளை மரங்களுடன் ஆப்பிள், ஆரஞ்சு மரங்கள் தோட்டத்தில் உள்ளன. அனைத்துமே இயற்கை உரத்தில் வளர்ந்தவை. உஷ்ண பூமியாக இருந்தாலும் ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை நன்கு வளர்கின்றன. மாட்டுச்சாணம், மண்புழு உரம் போன்றவைகளை தான் உரமாக பயன்படுத்துகிறேன். இதற்காக கன்றுகளுடன் பசுக்கள், காளைகளை வளர்க்கிறேன். இரண்டு வயதாகும் காங்கேயம் காளை இப்பவே துள்ளிக்கிட்டு திரிகிறது. முன்பு நூறு மாடுகள் இருந்தன. தற்போதுள்ள நாற்பது மாடுகளை கவனிப்பதிலேயே பொழுது சரியாகிறது.முன்பெல்லாம் பொங்கல் வைத்து சொந்தம், நட்பு வட்டாரங்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வர். ஆனால் இந்த நவீனயுகத்தில் அந்த மகிழ்ச்சி மிஸ்சிங் என்பது உண்மை தான். என்னை பொறுத்தவரை பொங்கலை வீட்டில் கொண்டாடுவதுடன், மாட்டுப் பொங்கலன்று பண்ணை வீட்டில் குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடுவதை கடமையாக கொண்டுள்ளேன்.சூரிய ஒளி இல்லை எனில் பயிர்கள் வளராது. உழவுக்கு உறுதுணையாக இருப்பவை பசுவும், காளையும். இதனால் தான் தை மாதம் அவைக்கு, நன்றி பாராட்டும் வகையில் காளைகளை அலங்கரித்து மந்தையில் விடுவர். கண்ணபிரான், ஏழு காளைகளை அடக்கி மணம்புரிந்தான் என்கிறது மகாபாரதம். சங்க காலத்திலும் மஞ்சு விரட்டு நடந்ததற்கு ஆதாரம் உள்ளது. வயலை உழ, உணவுக்கு பால் என உதவியாக இருப்பதுடன், கால்நடைகளின் சாணம் இயற்கை உரமாகவும் உள்ளது. இதை உணர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பசுக்களை வளர்க்கின்றனர். பசுக்களை காக்க, காளைகளை காக்க வேண்டும். காளைகளை காக்க, ஜல்லிக்கட்டு அவசியம். அதை உணர்ந்து தான், மத்திய அரசு இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த பச்சை கொடி காட்டியது என்றார்.மேஷ்பா