உள்ளூர் செய்திகள்

கொசு கடிக்காது, காக்கா பறக்காது, விஷம் துளைக்காது மலையில் ஒரு மர்ம தேசம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எல்.மலையூர்; வாகனங்களுக்கு வழி இல்லாத கிராமம். நத்தம் - மதுரை பாலமேடு மலைப்பாதையில், முளையூர்- எல்.மலையூர் செல்லும் ஒற்றையடி (7 கி.மீ.,) பாதை தான், ஒரே வழி. வெளியாட்கள் உள்ளே நுழைவதை கண்காணிக்க, உள்ளூர் நண்பர்கள்; அடுத்த சில நிமிடத்தில், வருவோரை வரவேற்க, எல்லையில் குவிகிறது வாலிப பட்டாளம். 'ஜில்' காற்றில், நடக்கும் ஆனந்தம் சிறிது நேரமே. வியர்த்து, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க வைக்கிறது, அந்தப் பாதை. ஆங்காங்கே அமர்ந்து, ஆசுவாசப்படுத்தி, மலையூரை அடைய குறைந்தது இரண்டு மணி நேரம் பிடிக்கிறது. எழில் கொஞ்சும் மலையூர்: கோட்டையாய் அமைந்த மலைகள், மலையூருக்கு இயற்கை அளித்த பாதுகாப்பு அரண். ஊருக்குள் நுழைந்ததும், வேற்றுக் கிரகத்திற்கு வந்த உணர்வு. கண்ணுக்கு எட்டிய தூரம், மரகத கம்பளம் விரித்துள்ளது பசுமை. மஞ்சள் செவந்தி பூக்களின் 'மஞ்சள் கம்பள' வரவேற்பு, ரம்யம். விளைந்த கேழ்வரகு, சாமைக்கதிர்கள் காற்றில் அசைந்தாடி, நம்மை ஆனந்த கூத்தாடச் செய்கின்றன.நுழைவு வாயில் நெருங்கியதும், 'வீரடி காட்டு தெய்வம் குடியிருக்கா...! பூமித்தாயை செருப்பால் மிதிக்காதே...! கழட்டி கக்கத்தில் வை... ஊருக்குள்ள கவனமா போவணும்... எல்லை மீறுனா... தொல்ல தருவா வனதேவதை... ஜாக்கிரதை...!' ஊர் பெரியவரின் கரகரப்பு கட்டைக் குரல், நம்மை எச்சரித்தது. அவர் வழியில், நடையைக் கட்டிய நம்மை, மிரட்சி பொங்கப்பார்த்தனர், கிராம வாசிகள். அவர்கள் பாணியில் கும்பிடு போட்டு, அறிமுகம் செய்து கொண்டோம். அதன் பின், அவர்கள் சொன்ன ஆச்சரியத் தகவல்கள் இதோ:கொசு கடிக்காது: ''வீரடி காட்டு தெய்வம் அய்யனார், கருப்புசாமி, இங்கே குடியிருக்காங்க; அவுகளுக்கு இந்த ஊரே கட்டுப்பட்டது. அள்ளிக்கொடுக்கும் பூமாதேவிக்கு மரியாதை செய்ய, யாரும் செருப்பு போட மாட்டோம். ஊருக்குள் ஒரு கொசு நுழையாது; கொசுக்கடி வலி, எங்க யாருக்கும் தெரியாது,'' என்றார், திருமலை.காகம் பறக்காது: ''மாத விடாய் காலத்தில், ஏழு நாட்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளி@ய வரமாட்டார்கள். மீறுவோரை, காகம் பறந்து வந்து, காட்டிக் கொடுக்கும். அவர்கள், ஆடியில் கனி படைத்து, பூஜை செய்து தெய்வத்திடம் மன்னிப்பு கேட்பர். கட்டுப்பாட்டை பெண்கள் மீறியதில்லை என்பதால், எங்க ஊரில் காகம் பறக்காது,'' என்றார், நாகம்மாள்.விஷம் துளைக்காது: ''மூன்று பேரில் உருவான இந்தக் கிராமம், 250 தலைக்கட்டுகளாக உருவெடுத்தது. விஷ ஜந்துகள் கடித்தால், பாறையில் தேங்கியுள்ள வற்றாத அய்யனார் தீர்த்தத்தை மூன்று முறை குடிப்போம்; எப்பேர்பட்ட விஷமும் நொடியில் முறிந்து விடும்,'' என்றார், அழகன்.மலைக்க வைத்த மலையூரில் இருந்து விடை பெற்றோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்