உள்ளூர் செய்திகள்

சேலை கட்டிக்கலாம்... சாரி ஒட்டிக்கலாம்

பாவாடை தாவணியும், எட்டு முழசேலைகளுடன் அழகு தேவதைகளாய் கருப்பு வெள்ளை காலத்தை மனதிலும், திரையிலும் ஓடவிடுவோரை இன்னமும் தூண்டிலாய் இழுப்பது சேலைகள்.பெண்மையை கொண்டாடும் கவிகளால் ஒற்றை வரியிலாவது ஒரு கவிதை, ஒரு வசனம் பிறந்திருக்கும். தொப்புள் கொடி உறவென தமிழ் பாரம்பரியத்தோடு ஒன்றித்து விட்ட சேலைகளுக்கு போதாத காலமாய் இந்த நூற்றாண்டு புத்தம் புதிய மாடல்கள், டிசைன்கள் புரட்டிப் போட்டுள்ளன.வாழ்க்கை சக்கரம் வேலைப் பளுவோடு சுற்றுகையில், அதற்கு ஈடாய் வேகமெடுக்கும் கடிகார முள்ளின் ஓட்டத்திற்கு இணையாய் இந்த எட்டு முழம் சேலைகளையும், முழங்கை வரை நீளும் ரவிக்கைகளையும் மின்னல் வேகத்தில் கட்டுவது என்பது சாத்தியமில்லை. ஆனால் அதையும் இன்றைய இளைய தலைமுறைதான் சாத்தியப்படுத்தியுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நிமிடத்தில் கட்டிக் கொள்ளும் ரெடிமேட் சேலைகள் அறிமுகமாகியுள்ளன. அதில் கொசுவம், மடிப்புகள், பாக்கெட்டுகள் என புதுமைகள் ஆச்சரியம் தந்தன. இப்போது அதையும் தாண்டி, மதுரை 'டீரீம்சோன்' மாணவிகள் ஒட்டிக் கொள்ளும் சேலையை இந்த பொங்கலுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.இது பேஷன் டிசைனர்களின் காலமாக இருந்தாலும், இந்த மாடல் இதுவரையிலும் இந்தியாவில் எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை, என கொண்டாடுகின்றனர் மாணவிகள். பின்டெக்ஸ் சாரீஸ், ப்ரில்பேஸ் சாரீஸ், ஸ்கேட் சாரீஸ் என மூன்று வகையாக டிசைனர்கள் அபிநயா, ஸ்வேதா, சாருமதி வடிவமைத்துள்ளனர். அனைத்தும் ஒட்டு ரகமாக இருந்தாலும், இந்த நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் வடிவமைக்கப் பட்டுள்ளனவாம்.ஏற்கனவே 'டூ மினிட்ஸ் சாரீஸ்' அறிகமாகியிருப்பதால், இதனை 'ஒன் மினிட் சாரீஸ்' என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். அத்தனை எளிதாக அணிந்து விடலாம். இந்த டிசைன்களில் கொசுவம், மடிப்பை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். ''ஸ்கர்ட் போன்று அணிந்து விட்டு, சேலைக்கு தகுந்தாற போல் வடிவமைக்கப்பட்டுள்ள 'வெல்க்ரோ' இடுப்பில் ஒட்டிக் கொண்டால் அச்சு அசலாக சேலை கட்டியது போன்ற தோற்றம் தரும். பேஷன் டிரஸ் அணிவது போன்ற எண்ணம் இருந்தாலும் மற்றவர்கள் பார்வையில் இது சேலையாக காட்சி தருவது கூடுதல் அழகு என்கிறார்கள்'' மாடலிங் மாணவிகள் ஷபியா, லலிதாதேவி, சுகன்யாராஜ். 'ப்ரில்பேஸ்' சாரீஸ் வடிவமைப்பில் 'கேதர்ஸ் எபெக்ட்' சுருக்கம் கொடுப்பதால் இதற்கு மட்டும் மூன்று வித துணிகளாக இது வடிவமைக்கப்படுகிறது. மற்ற இரண்டு வகையான டிசைன்களுக்கும் இரு வகையான துணிகளாக டிசைன் செய்துள்ளனர்.சேலை கட்டுவது கடிமானது, சேலை கட்டிக் கொண்டு பணிகளை எளிதாக செய்ய முடியாது என்பதற்காக இதனை புறக்கணிக்கும் மன நிலைக்கு பெண்கள் வருகிறார்கள். ஆனால் இந்த மாணவிகளின் தயாரிப்புகள் இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பொங்கலுக்கு சிறப்பு தயாரிப்பாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த புதுமை சேலைகள் மாடலிங் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவிகள் காத்திருக்கின்றனர். வாழ்த்த thangarajeswari.kr@gmail.comடபிள்யு.எட்வின்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்