தைமகள் வந்தாள்... புதுவாழ்வு தந்தாள்
நன்றி சொல்வோமா... விவசாயத்திற்கு துணை நிற்கும் சூரியன், மாடு, பணியாளர்களுக்கு நன்றி சொல்லும் நல்ல நாள் பொங்கல். சூரியன் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல் நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்பவர் சூரியனே. அவருக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்கு மாட்டுப்பொங்கலும், உறவினர், நண்பர்களை பாராட்டும் விதமாக காணும் பொங்கலும் உள்ளன.வழி பிறக்கும்சுபநிகழ்ச்சி நடத்த ஏற்ற மாதம் தை. பெண்ணை பெற்றவர்கள், 'வரும் தையில் கல்யாணத்தை வச்சுக்கலாம்' என்பது வழக்கம். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பர். தைமாதத்தில் பெரும்பாலும் அறுவடை முடிந்து விடும். அதனால் விவசாயிகள் கையில் பணம் புழங்கும் நேரம். கல்யாணச் செலவு செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் இப்பழமொழி உண்டானது. இதற்கு வேறொரு பொருளும் உண்டு. வயலில் அறுவடை முடிந்தபின் வரப்பு வழியாக எளிதாக நடக்க முடியும். அதையே 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பர்.பலம் தரும் மந்திரம் “உலகின் இருளைப் போக்கி ஆத்ம பலம் தரும் ஒளிச்சக்தி எதுவோ அதை நமஸ்கரிப்போம்” என ரிக் வேதம் சூரியனை போற்றுகிறது. காசிப முனிவரின் மகனான சூரியன், வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வான மண்டலத்தில் பவனி வருவதால், 'சப்தாஸ்தவன்' எனப்படுகிறார். சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரர் மாதலி தேரோட்டியாக உள்ளார். கிரகங்களுக்கு தேவையான சக்தியை சூரியனே அளிக்கிறார். காயத்ரி மந்திரத்தின் ஆற்றலால் சூரியன் வானில் வலம் வருகிறார். ராசிக்கு ஒரு மாதம் கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் ஒரு ராசியில் தங்கியிருக்கும். குரு ஓராண்டும், ராகு, கேது ஒன்றரை ஆண்டும், சனி இரண்டரை ஆண்டு காலமும் தங்குவர். ஆனால் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்குவார். இவர் மேஷ ராசியில் தங்கும் மாதம் சித்திரை. ரிஷபத்தில் வைகாசி, மிதுனத்தில் ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் பங்குனி என பன்னிரண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. இவற்றில் மகர ராசிக்குள் நுழையும் நாளையே பொங்கலாக கொண்டாடுகிறோம்.வள்ளல் கர்ணன்ஒரு சமயம் துர்வாச முனிவர் குந்தி போஜனின் அரண்மனைக்கு வந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட அவருக்கு உதவி செய்ய மகள் குந்தியை நியமித்தான் குந்திபோஜன். இளவரசி குந்தியும் பணிவிடை செய்து முனிவரின் ஆசியைப் பெற்றாள். முக்காலமும் உணர்ந்த துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவர் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை ஞான திருஷ்டியால் அறிந்தார். அதனால் மகப்பேறு தரும் 'புத்திர லாபம்' என்னும் மந்திரத்தை உபதேசித்தார். குந்தி அதன் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பினாள். சூரியதேவனை எண்ணி அந்த மந்திரத்தை ஜபித்தாள். அவள் முன் சூரியன் காட்சியளித்து தன் அம்சமான ஆண் குழந்தையை அளித்தார். அந்த குழந்தையே கர்ணன். சூரியனின் மகனாகிய இவன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதபடி தானம் அளிக்கும் வள்ளலாக வாழ்ந்தான். கொண்டாட்ட மாதம்தை முழுவதும் கொண்டாட விசேஷ நாட்களுக்கு குறைவில்லை. முதல்நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு வழிபடுகிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். கால்நடைகளுக்கு பொங்கல் இட்டு நன்றி செலுத்துகிறோம். மூன்றாம் நாள் மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில ஊர்களில் ஆறு, கடற்கரையில் உறவினர், நண்பர்களுடன் பேசி மகிழும் காணும் பொங்கல் நடைபெறும். மகர ஜோதியாக சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவதும் தையில் தான். தை செவ்வாய், தை வெள்ளியன்று விரதம் இருந்து அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். தைஅமாவாசையன்று தீர்த்தக் கரைகளில் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் சேரும் நாளில் தைப்பூச விழா நடக்கும்.இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து முருகன் கோயில்களில் அபிேஷகம் செய்வர். தை மாத வளர்பிறை சப்தமியன்று(ரத சப்தமி) சூரியனை வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். பொங்கலோ பொங்கல்பொங்கல் என்று உணவின் பெயரை பண்டிகைக்கும் வைத்திருப்பது வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் சிந்தித்து பார்த்தால் உண்மை புரியும். 'பொங்கு' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது பொங்கல். அதாவது வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் என எல்லா நன்மைகளும் பொங்கி பெருக வேண்டும் என்பதால் உருவான விழா இது. இதன் அடிப்படையில் பொங்கல் இடும் போது 'பொங்கலோ பொங்கல்' என சொல்லி உலையில் அரிசி இடுவர். அப்போது சுமங்கலிகள் குலவை என்ற மங்கல ஒலி எழுப்புவர். பார்த்தாலே யோகம்ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் இருப்பிடத்தைக் கொண்டே ஜோதிடம் பலன் கூறுகிறது. இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு அனைத்தும் கிரகங்களின் பெயர்ச்சிகளாலேயே ஏற்படுகின்றன. ஒன்பது நவக்கிரகத்திற்கும் கதாநாயகன் சூரியன். நட்சத்திரங்களில் ஒன்று என விஞ்ஞானிகள் சொல்ல, ஜோதிடர்களோ அதை கிரகமாக பார்க்கின்றனர். ராசிகளில் சிம்மத்தின் அதிபதியாக இருக்கும் சூரியன், மேஷ ராசியில் செல்லும் போது உச்சபலத்தை பெறுகிறார். இதனை 'அக்னி நட்சத்திரம்' என்பர். சூரியனின் நிலையை வைத்தே ஒருவரின் உடல்நலம், ஆன்ம பலம், ஆன்மிக யோகத்தை அறியலாம். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு நெருங்கிய நண்பர்கள். இக்கிரகங்களுடன் சூரியன் இருந்தாலும் அல்லது அவர்களை பார்த்தாலும் யோகம் ஏற்படும். சூரிய வம்சம் அயோத்தியை ஆண்ட வம்சம் சூரிய வம்சம். நீதி, நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லவர்கள் மன்னர்களாக பிறந்த குலம் இது. கொடிய துன்ப காலத்திலும், உண்மை பேசிய ஹரிச்சந்திரன், சனி பாதிப்பிலும் வழி தவறாத நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வளித்த திலீபச் சக்கரவர்த்தி, சத்தியம், தர்ம வழியில் வாழந்து காட்டிய ராமர் ஆகியோர் சூரிய குலத் தோன்றல்களே. சூரியனை வழிபடுவோருக்கு சூரியகுல மன்னர்களின் ஆசி கிடைக்கும்.சூரியனின் மதம்சூரியனை மட்டும் வழிபடும் 'சவுரம்' என்னும் மதம் முன்பு இருந்தது. 'மண்டல பிரம்மோபநிஷதம்' என்னும் உபநிடதம் சூரியனை முழுமுதல் கடவுளாக குறிப்பிடுகிறது. யாக்ஞவல்கிய மகரிஷிக்கு சூரியனே நேரில் தோன்றி இந்த உபநிடதத்தை உபதேசித்தார். பிற்காலத்தில் சூரியவழிபாடு நவக்கிரக வழிபாட்டுடன் இணைந்தது. நவக்கிரகங்களின் தலைவனாக சூரியன் தற்போது இருக்கிறார். கரும்பு சொல்லும் சேதி பொங்கலில் இடம் பெறும் கரும்பு உழைப்பின் அருமையை கற்றுத் தருகிறது. அதன் மேல் பகுதி உப்புத்தன்மையுடனும், அடிப்பகுதி இனிமை மிக்கதாகவும் இருக்கும். மனித வாழ்வும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க தயங்கக் கூடாது. இதனால் முதுமையில் சிரமமின்றி வாழலாம். இதை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்தால் வாழ்வு இனிக்கும் என்பதே கரும்பு சொல்லும் சேதி. ரஸ்மி சொல்றதைக்கேளுங்க...ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்.