உள்ளூர் செய்திகள்

மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்

எங்கும் காப்பு கட்டி கொண்டாடும் கிராமப்பொங்கல்

ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் கிராமத்து விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலிடுவது என்று பொதுவாக நாம் நினைத்தாலும், கொண்டாடப்படும் முறைகள் வேறுபடுகிறது. இதனை கொண்டாடும் விதம் குறித்து, கல்வி, வேலை காரணமாக மதுரையில் தங்கியிருக்கும், கிராமத்து இளம் பெண்களிடம் கேட்டோம்.அவர்களின் பொங்கல் இது...

திருஷ்டி குண்டம்

சுமதி (கண்ணத்தேவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்): நான் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம்.ஏ., படிக்கிறேன். காணும் பொங்கல் அன்று, அம்மன் பச்சரி செடி, வேப்பிலை, மாவிலை, நவதானியங்கள் சேர்த்து கட்டிய துணியுடன் காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கும். இந்தக் காப்பை வீடு, தோட்டம், வயல் என கட்டுவோம். மனைப் பொங்கல் அன்று சூரிய உதயத்துக்குள் புத்தாடை உடுத்தி, பனங்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் இவற்றை மாலையாக இரண்டு புதுப்பானையில் கட்டுவோம்.

சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வைத்து கும்பிடுவோம். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று கரும்பு, பனங்கிழங்கு, வாழைப்பழத்தை சேர்த்துக் கட்டிய மாலையை ஆடு, மாடுகளின் கழுத்தில் கட்டுவோம். சூரிய அஸ்தமத்துக்கு பின் மாட்டுத் தொழுவத்தில் இரண்டு பானைகளில் சர்க்கரை, வெண்பொங்கல் வைத்து, ஆடு, மாடுகளுக்கு ஊட்டுவோம். ஒவ்வொரு தெருவிலும், வைக்கோல் பரத்திய குண்டத்தில், கடுகு, உப்பு, மிளகா, சோளம் போன்றவற்றை போட்டு, மூன்று முறை ஆடு மாடுகளை வலம் வர செதபின், குண்டத்தின் ஓரத்தில் நெருப்பை வைத்து அதில் கால்நடைகளை இறங்கி ஓடச் செது திருஷ்டி கழிப்போம். மாடுகள் கழுத்தில் கட்டிய மாலையை அறுத்து, வாழைப்பழத்தை ஊட்டிவிட்டு மாலையை வீட்டில் பத்திரப்படுத்துவோம். இதன் மூலம் கால்நடைகள் மேல் இருக்கும் திருஷ்டி கழிவதுடன்,வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

சமாதியில் பொங்கல்

மல்லிகா (மீனாட்சிபுரம், விருதுநகர் மாவட்டம்) : நான் மதுரையில் ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன். போகிப் பண்டிகை அன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, தூக்கி எறியும் பொருட்களை எரிப்பதில் இருந்து தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் கொண்டாட்டம் தான். எத்தனை கஷ்டம் என்றாலும், பொங்கல் அன்று புத்தாடை எடுத்து விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கொம்புகளை சீவி அலங்கரித்தை, சாம்பிராணி புகை காண்பித்து வணங்கி வெண்பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டி விடுவோம். பின், இறந்தவர்களின் சமாதிகளுக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து அவர்களை வணங்கியபின் தான் வீட்டில் அசைவம் சமைத்து உறவினர் வீடுகளுக்கும் கொடுத்து சாப்பிடுவோம். அதன் பின் ஊரில் கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

வயல், கிணறுகளில் காப்பு

ஜெயஜோதி( கம்பாளி, விருதுநகர் மாவட்டம்):நான் மதுரையில் ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன். எத்தனை ஏழ்மை நிலை என்றாலும், பொங்கலுக்கு கண்டிப்பாக புத்தாடை உண்டு. போகிப்பண்டிகை அன்று ஊறவைத்த கம்பு, பயறுடன், அம்மன் பச்சரி செடி, வேப்பு, ஆலம்விழுது சேர்த்து வீடு, தோட்டம், வயல், கிணறு என எல்லாப் பகுதிகளிலும் காப்பு கட்டுவோம்.எங்கள் ஊரில் மனைப் பொங்கல் அன்று சூரியன் வருவதற்குள் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டு விடுவோம். மாட்டு பொங்கலன்று வெண்கலச் செம்பில் தண்ணீர் வைத்து மஞ்சள் பூசி, அருகம்புல் சொருகி, தாம்பாளத்தில், கிழங்கு தானியங்களை பரப்பி மாட்டை வணங்குவோம். பின்பு அதற்கு திருஷ்டி கழிப்போம்.

ஓலைப் பெட்டியில் நெல்

சர்மிளா (காரைக்குளம், சிவகங்கை மாவட்டம்):நான் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம்.ஏ., படிக்கிறேன். விவசாயம் தான் எங்கள் வாழ்க்கை. தை முதல் நாள் சூரியனுக்கு சர்க்கரை, வெண்பொங்கல் என இரண்டு பொங்கல் வைத்து வணங்குவோம். மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வோம். இப்படி பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

லட்சுமி வீட்டிற்கு வரும் நாள்

கார்த்திகா (பிசிண்டி, விருதுநகர் மாவட்டம் ): நான் மதுரை யாதவா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். போகிப் பண்டிகை அன்றே வீட்டுக் குப்பைகளை எரிப்பதுடன் அன்றிலிருந்து பொங்கல் முடியும் வரை வீட்டைக் கூட்ட மாட்டோம். பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பதற்காக இதைக் கடைபிடிக்கிறோம். வீடு, கிணறு, வயல் போன்ற இடங்களில் காப்பு கட்டி சூரிய உதயத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குவோம்.இப்படி பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்