உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (257)

அன்புள்ள அம்மா...நான், 12 வயது சிறுமி. அரசுப் பள்ளியில் படித்து வருகிறேன். சமீபத்தில், குடும்பத்துடன் ஒரு அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு, 'பெரியவர்கள் விளையாடக் கூடாது' என்ற எச்சரிக்கையை மீறி, என் தாய், குழந்தைகளுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடினார். அரைமணி நேரம் குதியாட்டம் போட்டார். இறங்க மனமில்லாமல் வந்தார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்ததை காண முடிந்தது. நாங்கள் கட்டியுள்ள வீட்டில், ஊஞ்சல் இல்லை. ஊஞ்சல் பற்றி எனக்கு எதுவும் சரியாக தெரியாது. ஊஞ்சலுக்கென்று ஏதாவது தனி மகத்துவம் உள்ளதா...இப்படிக்கு,நா.ராஜாமகள்.அன்பு மகளே...கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில், பழங்காலத்தில் இருந்த, மின்னோவன் கலாசாரத்தில், கி.மு., 1450 - 1300களில், முதன்முறையாக மக்கள் ஊஞ்சல் ஆடியதாக சான்றுகள் உள்ளன. ஊஞ்சல் ஆடுவதில், ஒரு பவுதிக விதி உள்ளது. ஊஞ்சல் முதலில், நிலை ஆற்றலை, இயக்க ஆற்றலாக மாற்றுகிறது. பின், இயக்க ஆற்றல், நிலை ஆற்றலாக மாறுகிறது. தமிழகத்திலும், குஜராத்திலும் பெரும்பாலும், வீடுகளில் ஊஞ்சல் அமைத்திருப்பர். இந்தியாவின் வட மாநிலங்களில் வசிப்போர், ஊஞ்சலை, 'ஜுலா' என அழைக்கின்றனர். பொதுவாக, ஊஞ்சல் தோட்டத்திலும், உள் முற்றத்திலும், உணவு அறை, வாழ்வறை நடுவிலும் காணப்படும். வாஸ்து சாஸ்திரப்படி, ஊஞ்சல் வீட்டின் வடப்பக்கம் அல்லது கிழக்கு பக்கம் தான் நிறுவப்பட வேண்டும். யானைக்கு தந்தம் போல, ஒரு வீட்டுக்கு, ஊஞ்சல் மங்களகரமான விஷயம். ஊஞ்சல் நேர்மறை சக்தியையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்குகிறது. ஊஞ்சலாடுவோர் தங்களை மன்னராக அல்லது மகாராணியாக பாவித்துக் கொள்வர். எல்லா வயதினரும், ஊஞ்சல் ஆடலாம் என்றாலும், ஊஞ்சலாடும் குழந்தைக்கு, 10 முதல் 15 கிலோ எடை இருப்பது நல்லது.ஊஞ்சலாடும் குழந்தைகளுக்கு, எட்டு வயது வரை ஞாபக சக்தியும், புத்திசாலிதனமும் கூடும். ஊஞ்சலாடுவது, யோகா அல்லது தியானம் செய்வது போல சிறப்பான செயல். ஊஞ்சலாடும் குழந்தைகளுக்கு முழுமையான ஆழ்ந்த துாக்கம் கிடைக்கும். ஆனால், ஊஞ்சலில் படுத்து துாங்குவது, உயிருக்கு ஆபத்தானது. ஒரு வீட்டில், ஊஞ்சல் அமைக்கும் போது, உரிய தரக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.ஊஞ்சலின் வகை பற்றி பார்ப்போம்...-வினையில் ஊஞ்சல், மர ஊஞ்சல், பிஸ்பினால் இல்லாத பிளாஸ்டிக் ஊஞ்சல், கூடை ஊஞ்சல், அலுமினிய ஊஞ்சல், மணி, விசில், ப்ளூடூத் இணைக்கப்பட்ட ஊஞ்சல், மூங்கில் ஊஞ்சல் என, பல வகை உள்ளன.ஊஞ்சல் ஆடும் போது சுய பாதுகாப்பு மிக முக்கியம். குழந்தைகளை ஊஞ்சலில் உட்கார வைத்து, அசுர வேகமாய் ஆட்டுவது ஆபத்தானது. அது கவிழ்த்து விடுவதற்கான தருணங்கள் ஏற்படும். தலைக்காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, கவனம் தேவை.எனக்கும், என் அம்மாவுக்கும், பாட்டிக்கும் ஊஞ்சலாட கொள்ளை பிரியம். ஊஞ்சலாடும் பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஒரு வாட்ஸ்அப் குழு ஆரம்பிக்க வேண்டியது தான்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !