அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!உயிர் தோழன்!'ஹெல்'லை சீக்கிரமே அடைந்து விடாமல், நம்மை காக்கும் தோழன் ஹெல்மெட்.தர்மம் தலை காக்கும் என்பர்; ஹெல்மெட்டும் தான். விபத்துகளின் போது, மூளைக்கு அதிக சேதம் ஏற்படாமல், 'ஹெல்மெட்' காப்பாற்றும் என்றனர் நரம்பியல் நிபுணர்கள். போர்க்களத்தில் தான் முதலில், 'ஹெல்மெட்' உபயோகிக்கப்பட்டது. கி.மு., 900ல், அசிரியா ராணுவ வீரர்கள், தடிமனான தோலினால் செய்யப்பட்ட மற்றும் வெண்கலத்தால் ஆன, தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். போரில், அம்புகளும், வாள்களும், தங்கள் தலைப் பகுதியை பாதிக்காமல் இருப்பதற்கு தான் இந்த ஏற்பாடு. இது தான், பின்னாட்களில், வித விதமான தலைக் கவசங்களாக மாறின.கிரிக்கெட் வீரர்கள், குதிரைப் பந்தய வீரர்கள், அமெரிக்க கால்பந்து வீரர்கள், ஐஸ் ஹாக்கி விளையாடுபவர்கள், பந்தயக் கார் ஓட்டுபவர்கள் என்று விளையாட்டு வீரர்கள், தங்கள் விளையாட்டுக்கு ஏற்ப, ஸ்பெஷலான ஹெல்மெட்டுகளை அணிந்து கொள்கின்றனர். கட்டட வேலை, சுரங்கங்கள் தோண்டுதல் போன்ற, ஆபத்தான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும், 'ஹெல்மெட்' தேவைப்படுகிறது. இவர்கள், மிக மிக உறுதியான பிளாஸ்டிக்காலான, ஹெல்மெட்டுகளை அணிகின்றனர். விபத்து ஏற்படும் போது, அதிர்ச்சியை உண்டாக்கும் அதிர்வு அலைகளை, தான் தாங்கிக் கொண்டு, அதை, நம் மூளைக்கு அனுப்பாமல் தடுப்பது தான் ஹெல்மெட்டின் முக்கிய வேலை. விபத்துக்களின் போது, மிக வேகமான, கடும் மோதலை சமாளிக்க வேண்டுமென்றால், தரமான நிறுவனங்கள் தயாரித்து, நன்கு சோதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிவது தான் பாதுகாப்பானது.கருப்பு நிற ஹெல்மெட்டை விட, வெள்ளை நிற ஹெல்மெட் அணிவது தான் பாதுகாப்பானது. தொலைவில் வருபவர்களால், வெள்ளை நிற ஹெல்மெட்டை, எளிதில் கண்டறிய முடியும். அதுபோலத்தான் வெளிச்சம் இல்லாத நேரங்கள் மற்றும் இரவுகளில் வெள்ளை உடை பாதுகாப்பனது. உயர்தர ஹெல்மெட்கள் பைபர் கிளாஸ்களில் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் இடையே, கார்பன் இழைகள் செலுத்தப்படுகின்றன. நோக்கத்திற்கு தகுந்தாற் போல், ஹெல்மெட்களின் வடிவமைப்பும், உள்ளடக்கமும் மாறுபடும். பந்தய சைக்கிள் வீரர்கள் அணியும் ஹெல்மெட்கள் காற்றை கிழிக்கும் வகையில், வடிவமும், போதிய காற்றை உள்ளே அனுப்பும் தன்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். மலை ஏறுபவர்கள் அணியும் ஹெல்மெட், பெரும் எடைகளால் (கீழே உருளும் பாறைகள்) பாதிக்கப்படாததாக இருக்க வேண்டும். மற்றபடி, விபத்துக்களின் போது, சிலசமயம் ஹெல்மெட்டாலேயே கூட, காயம் உண்டாகலாம். அது, தவறான கோணத்தில், கழுத்தை அழுத்தினால் இறப்பு கூட நேரலாம். என்றாலும், இதுபோன்ற விதிவிலக்குகளை மனதில் கொண்டு, ஹெல்மெட் அணியாமல் இருந்து விடாதீர்கள்!- என்றென்றும் அன்புடன், அங்குராசு.