சட்டியூர்!
முன்னொரு காலத்தில் அலாஸ்பூர் என்ற ஊரில், மாநகருக்கு வெளியே சத்திரம் ஒன்று இருந்தது. அங்கே நிறைய பயணிகள் தங்கி இருந்தனர். வெளியே மழை பெய்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த பெரியவர் ஒருவர், ''நம்மால் எங்கும் வெளியே செல்ல முடியாது. எல்லாரும் பல ஊர்களில் இருந்து வந்திருப்பீர்கள். உங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லுங்கள். பொழுது இனிமையாக செல்லும்,'' என்றார்.''நான் கீரையூரில் இருந்து வருகிறேன். எங்கள் ஊரை ஏன் கீரையூர் என்று அழைக்கின்றனர் என தெரியுமா?'' என கேட்டார் ஒருவர். ''எல்லா வகையான கீரைகளும் உங்கள் ஊரில் விளையும். அதனால் அப்படி அழைத்து இருக்கலாம். கீரையூர் என்ற பெயரில் என்ன சிறப்பு உள்ளது?'' என்று கேட்டார் இன்னொருவர்.''எல்லாக் கீரைகளும், எல்லா ஊர்களிலும்தான் விளைகிறது. எங்கள் ஊரில் உள்ள கீரைச் செடியைப் பற்றிச் சொல்கிறேன். அங்கே ஒவ்வொரு கீரைச் செடியும் ஆலமரத்தை விட பெரிதாக இருக்கும். அதன் இலை ஒவ்வொன்றும் வாழை இலையை விட பல மடங்கு பெரிதாக இருக்கும். அந்தக் கீரைச் செடியின் ஒரு இலையைப் பறித்தால் போதும். ஊர் முழுமைக்கும் சமையல் செய்து விடலாம்,'' என்றான்.''அப்படியா!'' என்று வியந்தனர் மற்றவர்கள்.''அந்த கீரைச் செடியைப் பற்றி இன்னும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். ஒரு கீரைச் செடியின் அடித்தண்டைச் சுற்றி வர, பல மணி நேரம் ஆகும். அதன் நிழலில் காலாட்படை, குதிரைப்படை யானைப்படை முழுமையாகத் தங்கலாம். மேலும், தங்குவதற்கும் அங்கே இடம் இருக்கும். ஒரு கீரைச் செடியின் தண்டைச் சமைத்தால் போதும், நம் நாட்டு மக்கள் எல்லாரும் பல நாட்கள் பசி இன்றிச் சாப்பிடலாம். அவ்வளவு பெருமை வாய்ந்த கீரை எங்கள் ஊரில் உள்ளது. அதனால்தான் அந்த ஊரை கீரையூர் என்று பெருமையுடன் அழைக்கின்றனர்,'' என்று அளந்தார்.அவர் சொன்னதை எல்லாரும் வியப்புடன் கேட்டனர். அதை நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பினர்.அங்கே இருந்தவர்களில் ஒருவர் அவர் அளப்பிற்குப் பதிலடி தர நினைத்தார்.''கீரையூர் என்ன பெரிய ஊர். அதைவிட பல மடங்கு பெருமை வாய்ந்தது எங்கள் சட்டியூர்!'' என்றார்.''சட்டியூரா? அப்படி ஒரு ஊர்ப் பெயரை நாங்கள் கேட்டது இல்லையே... அந்த ஊரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்றனர் மற்றவர்கள்.''எங்கள் ஊரில் மிகப் பெரிய சட்டி ஒன்று உள்ளது. அதனால்தான், 'சட்டியூர்' என்று பெயர் வந்தது. அவ்வளவு பெரிய சட்டியை நீங்கள் யாரும் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. பார்ப்பதற்கு அந்தச் சட்டி வானளாவ உயர்ந்த பெரிய மலை போன்று இருக்கும். அண்ணாந்து பார்த்தாலும் அதன் விளிம்பு கண்ணுக்குத் தெரியாது. அதைச் சுற்றிப் பார்க்க நினைத்தால், பத்து நாட்களுக்கு மேல் ஆகும். ''அந்தச் சட்டியின் மேலே ஏறி அதன் உட்பகுதியைப் பார்க்க ஆசை வரும். மேலே ஏற நான்கைந்து நாட்களாவது ஆகும். மேலே ஏறிப் பார்த்தால் அதன் உட்பகுதி பெரிய ஏரி போலத் தோன்றும். அதற்குள் பெரிய யானை கிடந்தாலும் சிற்றெறும்பு போலத் தெரியும். ஆயிரக்கணக்கான பேர் நூற்றாண்டுகள் முயற்சி செய்து அந்தச் சட்டியைச் செய்தனர்.''அந்தச் சட்டியைப் பார்ப்பதற்காகவே திருவிழா போலக் கூட்டம் வருகிறது. அவ்வளவு பெரிய சட்டியைப் பார்த்து வியப்பு அடையாதவர் யாரும் இல்லை,'' என்று அளந்தார்.அங்கிருந்த எல்லாரும் இதைக் கேட்டு வியப்பு அடைந்து நின்றனர்.'நம்மை விட இவர் பெரிதாக அளக்கிறாரே... எப்படியாவது இவரை மட்டம் தட்ட வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு மதிப்பு இருக்காது,'' என்று நினைத்தார் கீரையூர்க்காரர்.''சட்டியூர்க்காரரே! நீங்கள் சொன்னது போலப் பெரிய சட்டி உங்கள் ஊரில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சட்டியில் என்ன சமைப்பார்கள்? அதைச் சொல்லுங்கள்,'' என்று கேலியாகக் கேட்டார்.''உங்கள் ஊரிலிருந்து வரும் கீரையைத்தான் அந்தச் சட்டியில் சமைப்பார்கள். அந்தச் சட்டி மட்டும் இல்லாவிட்டால் உங்கள் ஊர்க் கீரை எல்லாம் வீணாகி விடாதா?'' என்று பதிலடி கொடுத்தார் சட்டியூர்க்காரர்.இதைக்கேட்டு எல்லாரும் சிரித்தனர்.கீரையூர்க்காரருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தலை கவிழ்ந்து நின்றார். அதே சமயம் மழையும் நின்றது. ''ஹி...ஹி... இவ்வளவு அழகாக நான் கதை அளந்ததால்தான், உங்களுக்கெல்லாம் நேரம் போனதே தெரியல... வாங்க போகலாம்!'' என்று சொல்லி சமாளித்தார் கீரையூர்க்காரர்.***