உள்ளூர் செய்திகள்

போட்டி!

முன்னொரு காலத்தில் கோட்டைபுரம் என்ற நாடு இருந்தது. அந்த நாட்டை புகழேந்தி என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார்.மன்னர் புகழேந்தி தன்னுடைய நெருங்கிய மந்திரியாருக்கு ஓய்வு கொடுக்க நினைத்தார். அவர் முதுமையை எட்டி விட்டார். மேலும், அடிக்கடி நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் காரணமாக, அவரால் அரசு அலுவல்களில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனை உணர்ந்துகொண்ட மன்னரே, மந்திரிக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்தார்.ஓய்வு கொடுப்பதில் உறுதியாக இருந்த மன்னர், 'புதிய மந்திரியை எப்படி தேர்ந்தெடுப்பது?' என்ற குழப்பத்தில் இருந்தார்.ஒருநாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார் மன்னர். புதிய மந்திரியை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி சிந்தனை செய்தார். அப்போது அவர் மனதில் ஓர் எண்ணம் உதயமானது. உடனே அரண்மனைக்கு விரைந்தார். தனது மெய்க்காப்பாளரை அழைத்தார். அவர் காதில் ஏதோ கூறினார்.மன்னரின் கட்டளையை ஏற்றுக் கொண்டவராக அவரும் உடனே அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் மூன்று கோப்பைகள் கொண்டு வந்தார். ஒரு கோப்பையில் ஒரு தங்கக்காசைப் போட்டு மண்ணை நிரப்பி வைத்தார். இன்னொரு கோப்பையில் வெள்ளிக்காசைப் போட்டு மண்ணை நிரப்பி வைத்தார். மூன்றாவது கோப்பையில் மண்ணை மட்டுமே போட்டு நிரப்பி வைத்தார்.மூன்று கோப்பைகளும் மன்னர் முன் வைக்கப்பட்டன. மன்னர் உடனே தான் தேர்வு செய்த மூன்று மந்திரிகளை வரவழைத்தார். 'மூவரில் அறிவுமிக்கவர் யார்? என்பதை அறிந்து அவரையே நாம் மந்திரியாக நியமித்துக் கொள்ள வேண்டும்' என்று முடிவு செய்தார். உடனே மூவரையும் கோப்பைகளின் முன்னே நிற்க வைத்தார். மூவரும் அடிபணிந்தபடி மன்னரை ஏறிட்டனர்.உடனே மன்னர், ''உங்கள் மூவருக்கும் அறிவு சார்ந்த இந்தப் போட்டியை வைத்துள்ளேன். இந்தப் போட்டியில் யார் வெற்றி யடைகிறீர்களோ அவர்களை நான் மந்திரியாக நியமிக்கப் போகிறேன். இந்த மண் நிரப்பப்பட்டுள்ள மூன்று கோப்பைகளில் ஒன்றில் தங்கக் காசு இருக்கிறது. மற்றொன்றில் வெள்ளிக்காசு இருக்கிறது. இன்னொன்றில் மண் மட்டுமே நிரப்பப்பட்டு இருக்கிறது. இதில் தங்கக்காசு எந்தக் கோப்பையில் இருக்கிறது என்பதை நீங்கள் கூற வேண்டும். யார் சரியாகக் கூறுகிறார்களோ அவர்களை நான் மந்திரியாக நியமிப்பேன்,'' என்றார் மன்னர்.மூவரும் போட்டிக்கு தயாராயினர். அதில் விஜயசேதுபதி என்பவன் ஒரு கோப்பையை சுட்டிக்காட்டினான்.''அரசே இதில் தான் தங்கக்காசு இருக் கிறது,'' என்றான்.உடனே விஜயசேகரன் என்ற பெயர் கொண்டவன் சிறிது நேரம் யோசனை செய்தான். பின்னர் விஜயசேதுபதி சுட்டிக் காட்டிய கோப்பையினையே தானும் சுட்டிக் காட்டினான்.''அரசே, நானும் இந்த கோப்பையில்தான் தங்கக்காசு இருக்கிறது எனக் கூறுகிறேன்,'' என்றான்.''என்ன இருவருமே ஒரே கோப்பையை சுட்டிக் காட்டுகிறீர்கள்! சரி... சரி... இருக்கட்டும் பார்க்கலாம்,'' என்றபடி இன்னொரு வரைப் பார்த்தார் மன்னர்.ஜீவதத்தன் என்ற பெயர் கொண்ட அவனோ ஒன்றுவிட்ட முதலாவது இருக்கிற கோப்பையை சுட்டிக்காட்டினான்.''அரசே, தங்கக்காசு இருப்பது இந்தக் கோப்பையில்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை,'' என்றான்.''சரி, மூவருமே போட்டிக்குத் தயாராகி விட்டீர்கள். அதனால் இப்போதே பரிசோதனை செய்து பார்த்துவிடலாம். யார் வெற்றிபெறப் போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்,'' என்று கூறினார் மன்னர்.உடனே மெய்க்காப்பாளரை அழைத்தார். முதலில் இருவர் சுட்டிக்காட்டிய கோப்பையில் உள்ள மண்ணை அகற்றும்படியாகக் கூறினார்.மெய்க்காப்பாளரும் அவ்வாறே மண்ணை அகற்றவே, கோப்பையினுள் வெள்ளிக்காசு இருந்தது. அதனை எடுத்து மன்னரிடம் காண்பித்தார். உடனே விஜய சேதுபதியும், விஜயசேகரனும் தாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை உறுதி செய்தபடி முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டனர்.அடுத்ததாக, மெய்க்காப்பாளர் ஜீவதத்தன் சுட்டிக்காட்டிய கோப்பையை கையில் எடுத்தார். அந்தக் கோப்பையில் உள்ள மண்ணையெல்லாம் அகற்றினார். அதனுள்ளே தங்கக்காசு இருந்தது. அதனை எடுத்து மன்னரிடம் காண்பித்தார்.மன்னர் ஜீவதத்தனைப் பாராட்டினார்.''ஜீவதத்தா, நீ சுட்டிக்காட்டிய அந்தக் கோப்பையில்தான் தங்கக்காசு இருக்கிறது என்பதை நீ எவ்வாறு கண்டுபிடித்தாய்?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.''அரசே கோப்பை இருந்த முறையை பார்த்தே அதில்தான் தங்கக்காசு இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்,'' என்றான்.''நீ சொல்வது எனக்கொன்றும் புரியவில்லையே,'' என்று மேலும் ஆச்சரியத்துடன் கேட்டார் மன்னர்.''அரசே, நாம் விலையுயர்ந்த பொருட்களை கையாள்கிறபோது சற்று பயத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள்வது வழக்கம். அதன்படி கோப்பையில் தங்கக் காசைப் போட்டு மண்ணை நிரப்பி வைத்தவர் மிகவும் எச்சரிக்கையுடன் ஒழுங்கான முறையில் மண்ணின் மேற்பரப்பை சீரான முறையில் வைத்திருக்கிறார்.''மற்ற இரு கோப்பைகளிலும் மண்ணின் மேற்பரப்பு அந்த அளவுக்கு சீராக இல்லை. அது ஒருபக்கம் மேடாகவும், மற்றொரு பக்கம் பள்ளமாகவும் இருந்தது. எனவே, இந்தக் குறிப்பினைப் பயன்படுத்தி தங்கக் காசு இருந்த கோப்பையை நான் கண்டு பிடித்தேன்,'' என்றான் ஜீவதத்தன்.ஜீவதத்தனின் அறிவைப் பாராட்டினார் மன்னர். பின்னர் அவனையே தன்னுடைய மந்திரியாக நியமித்துக் கொண்டார்.இதனையறிந்த சபையோர்கள் மந்திரியைத் தேர்வு செய்ய மன்னர் கையாண்ட சோதனையைப் பாராட்டினர். அவரின் மதிநுட்பத்தை வியந்து போற்றினர். குட்டீஸ் மதிநுட்பம் எல்லாருக்கும் இருக்கிறது. அதனை நாம் தக்க நேரத்தில் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எல்லா வகையிலும் வெற்றி பெற்றுவிடலாம்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !