உள்ளூர் செய்திகள்

தங்க ஆப்பிளும், அதிசய கிளியும்! (2)

சென்றவாரம்: விவசாயி வளர்த்த மரத்தில் காய்த்த தங்க ஆப்பிளை, ஒரு கிளி திருடிச் சென்றது. இதை அவரது கடைசி மகன் விக்ரம் கண்டறிந்தான். வீட்டில் விக்ரமை காணாமல் தவித்தனர் தகப்பனும் இரண்டு சகோதரர்களும். இனி -அப்போது, குரல் கொடுத்தவாறு, வீட்டின் முன் வந்து நின்றான், விக்ரம்.'வாப்பா... இப்போதான், உயிரே வந்தது! சொல்லாம, கொள்ளாம எங்கே போயிட்ட... ரொம்ப பதறிட்டோம் தெரியுமா... சரி, எங்கே போயிருந்த... ' என்று, ஒரே குரலில் மூவரும் கேட்டனர்.நடந்ததை விளக்கமாக கூறினான், விக்ரம்.''ஒரு கிளி, தங்க ஆப்பிளை, திருடி துாக்கிட்டு போனது... இதோ... அதுக்கு அடையாளமா இந்த சிறகு கிடச்சது...'' என்று, கிளியின் சிறகை காட்டினான்.தம்பியின் தீர செயலை அண்ணன்கள் பாராட்டினர். அப்போது தந்தை, ''மூவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன்...'' என்றார். 'என்ன போட்டி... என்ன பரிசு...' என்று, ஆவலுடன் கேட்டனர்.''தங்க ஆப்பிளை திருடிப்போன கிளியை கண்டு பிடிப்பது தான் போட்டி; இதில், வெற்றி பெறுபவருக்கு, முழு சொத்தும் கொடுப்பேன்... சம்மதமா...'' என்றார்.மகன்கள் மூவரும், சம்மதம் தெரிவித்து அந்த கிளியை தேடி, புறப்பட்டனர். கிளியை, கண்டுபிடித்து, சொத்து முழுவதையும் வசமாக்கிக் கொள்ள எண்ணினர்.மூத்த மகன் சுற்றி அலைந்தான். ஒரு சத்திரத்தில் தங்கினான். பக்கத்தில், சிலர், சிரித்துப் பேசி கொண்டிருந்த சத்தம் கேட்டது. அங்கே சென்றான்; சிலர், சீட்டாடிக்கொண்டிருந்தனர். அவர்களோடு சீட்டாடினான். அப்படியே பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்.இரண்டாவது மகன், காடு, மலையைக் கடந்து, பல இடங்களில் அலைந்தான். எங்கும், கிளியைப் பற்றி, சரியான தகவல் கிடைக்கவில்லை. அதனால், நொந்து போனான். அங்கும், மிங்கும் அலைந்தான். ஒரு திராட்சை தோட்டம் தெரிந்தது; அதற்குள் சென்றான்.அங்கு, திராட்சை ரசம் குடித்தபடி சிலர் இருந்தனர். வந்த வேலையை மறந்து, அவர்களுடன் திராட்சை ரசம் குடித்து பொழுதை போக்கினான்.மூன்றாவது மகன், விக்ரம் மிகவும் பொறுமைசாலி. நழுவிச் சென்ற, அந்த அதிசயக் கிளியை, தந்திரமாகத்தான் பிடிக்க முடியும் என்று எண்ணினான்.எனவே, கிளி, பறந்து சென்ற திசையில், பயணத்தை துவங்கினான். பல நாட்கள் நடந்தான். அவனது கால்கள் வலி எடுத்தன; தள்ளாடினான்; ஒரு பெரிய மரநிழலில், அமர்ந்தான்.சிறிது நேரத்தில், சாப்பிட ஆரம்பித்தான். அப்போது, ஒரு நரி, ''பசிக்குது; கொஞ்சம் சாப்பாடு கொடு...'' என்று கேட்டது.''கொஞ்சமாத்தான் சாப்பாடு இருக்கு; ஆனா, நீ கேக்குறதால பகிர்ந்து தின்னலாம்...'' என்று கூறி, உணவில் பங்கு கொடுத்தான்.மகிழ்ச்சி அடைந்தது நரி; பசியை போக்கிய விக்ரமிற்கு நன்றி சொல்லி, ''நீ எதுக்கு இப்படி அலைஞ்சி திரியிரே... என்ன விஷயம்...'' என்றது.''ஒரு அதிசய கிளியை தேடி அலையுறேன்; அது மட்டும் கிடைத்தால்...'' என்று பேச்சை முடிக்காமல், நிறுத்தினான்.''நான் மனசு வச்சா அந்த அதிசயக்கிளி கிடைக்கும்...'' ''என்ன சொல்ற... அந்த கிளி இருக்குற இடம் தெரியுமா...'' ''ஆமா... அந்த அதிசயக் கிளி இப்போ அரண்மனைல, இளவரசியோட பேசிக்கிட்டிருக்கு...'' ''அந்த கிளிய புடுச்சி தருவியா... தந்தா சொத்தில் ஒரு பங்கை குடுக்கிறேன்...'' இதை ஏற்ற நரி, உதவி செய்ய சம்மதித்தது. உடனடியாக விக்ரமை முதுகில் ஏற்றி வேகமாக சென்று, ஒரு கோட்டை மதில் மீது, இறக்கி விட்டது. அங்கிருந்து, அரண்மனையைக் காட்டி, ''அதோ... ஒரு ஜன்னல் பக்கதுல இருக்குற தங்க கூண்டுல தான், அந்த அதிசயக் கிளி இருக்கு. இப்போ நல்ல இருட்டு, எல்லாரும் துாங்குறாங்க... சத்தம் போடாம போய், கிளியை மட்டும் பிடிச்சிட்டு வந்துடு; கூண்டை எடுக்காதே...'' என்றது நரி.கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு மரக்கிளை. அதில் கயிற்றால் கட்டி, அரண்மனைக்குள் தாவி குதித்தான், விக்ரம். சுற்றும், முற்றும் பார்த்தபடியே, ஜன்னல் வழியே நுழைந்து, கூண்டை திறந்து, அதிசயக் கிளியை பிடித்தான்.'கிளியை தனியாக எப்படி எடுத்து செல்வது... கூண்டு இருந்தால் தானே நல்லது' என்று எண்ணி, அந்த தங்க கூண்டை கழற்றும்போது கொக்கி விழுந்தது.அப்போது கதவுகள் பேரிரைச்சலுடன் மூடின. கிளியும், 'கிரீச்... கிரீச்...' என்று கத்தியது. அரண்மனை சேவகர்கள் விழித்துக் கொண்டனர். விக்ரமை பிடித்து, அரசர் முன் நிறுத்தினர்.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !